வந்தவாசியில் மனைவியுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளை ஞரை முன்விரோதம் காரணமாக 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கோட்டை பகுதியில் வசிப்பவர் ஆட்டோ ஓட்டுநர் நசீர்கான்(30). இவர், கடந்த சில மாதங்களாக மாங்கால் கூட்டுச் சாலையில் சிக்கன் பக்கோடா கடை நடத்தி வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்து மனைவி ஷாகினாவை(25) அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
ஊராட்சி ஒன்றிய முஸ்லிம் தொடக்கப் பள்ளி அருகே சென்ற போது, முகமூடி அணிந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் வெட்டியது. அவர்களிடம் இருந்து தப்பித்து, அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் நசீர்கான் ஓடி யுள்ளார். இருப்பினும், அவரை விடாமல் விரட்டிச் சென்ற கும்பல் நசீர்கானை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பித்து சென்றுள்ளது. மனைவி கண் முன்னே கணவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து தகவலறிந்த வந்தவாசி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தி.மலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். அதில், கிடைத்த தகவலின் பேரில் 4 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நசீர்கான் கொலை குறித்து காவல்துறையினர் கூறும்போது, “முன் விரோதம் காரணமாக கொலை நடைபெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆட்டோ ஓட்டுநர்களாக இருந்த நசீர்கான் மற்றும் அதே பகுதியில் வசிக்கும் மஸ்தான் ஆகியோருக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. இதனால், காஞ்சிபுரத்தில் இருந்து கூலிப் படையை அழைத்து வந்து மஸ்தானை கொலை செய்ய நசீர்கான் முயன்றுள்ளார். இந்த சம்பவம் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து நசீர்கான் உள்ளிட்ட 3 பேரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
பின்னர் அவர்கள் மூவரும் கடந்த ஜனவரி மாதம் ஜாமீனில் வந்துள்ளனர். இதன் எதிரொலியாக நசீர்கான் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், கொலையாளிகளில் சிலர் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தெரு விளக்கு மின்சாரத்தை துண்டித்து கொலை செய்துள்ளனர்” என்றனர்.