புதுச்சேரியில் 45 வயதுக்கு மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினரும் கரோனா தடுப்பூசி போட வரும் 14 முதல் 16 வரை சிறப்பு முகாம் நடப்பதாக சுகாதாரத்துறை செயலர் டாக்டர் அருண் தெரிவித்துள்ளார்.
துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு என்று கரோனா தடுப்பூசிக்காக சிறப்பு முகாம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இதன் தொடர்ச்சியாக இன்று மாலை அனைத்து ஆட்டோ சங்கங்களின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் சுகாதாரத்துறை செயலர் டாக்டர் அருண் தலைமையில் நடந்தது.
இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை செயலர் அருண் கூறுகையில், " வரும் ஏப்ரல் 14,15,16 ம் தேதிகளில் 45 வயதுக்கு மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள சிறப்பு முகாம் நடக்கிறது.
இம்முகாமானது. இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி, கரிக்கலாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம், மண்ணாடிப்பட்டு சுகாதார நிலையம் மற்றும் இந்திராகாந்தி பொது மருத்துவமனை ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களும் அவர்கள் குடும்பத்தாரும் பங்கேற்று தடுப்பூசி போடலாம். ஆட்டோக்களில் விழிப்புணர்வுக்காக ஒட்டுவதற்காக கோவிட் தடுப்பூசி குறித்த ஸ்டிக்கரும் தரப்பட்டது" என்று குறிப்பிட்டார்.