பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.ஜெயக்குமாருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், பெருந்துறை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடுபவர் எஸ்.ஜெயக்குமார் (42). சட்டப்பேரவைத் தேர்தல் பணிக்காக தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட ஜெயக்குமார், வாக்குப்பதிவு நடந்த 6-ம் தேதியன்று பொன்முடி கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்குச் சென்று வாக்குப் பதிவினைப் பார்வையிட்டார்.
அன்றே அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டபோது, ஜெயக்குமாருக்குக் கரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பத்து நாட்கள் தனிமையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இந்நிலையில் பெருந்துறை அரசு மருத்துவமனையில், ஜெயக்குமார் பத்து நாட்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவதால், அடுத்த 10 நாட்களுக்கு நேரிலோ, தொலைபேசியிலோ அவரிடம் பேசுவதைத் தவிர்க்குமாறு அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.