கும்பகோணத்தில் வாக்காளர்களுக்கு 2000 ரூபாய்க்கு போலி டோக்கன் கொடுத்து நூதன முறையில் ஏமாற்றிய சம்பவம் தொடர்பாக அமமுக பிரமுகர் மீது காவல்துறையினர் இன்று (8-ம் தேதி) வழக்குப் பதிவு செய்தனர்.
கும்பகோணம் தொகுதியில் சில பகுதிகளில் அண்மையில் ஒரு அரசியல் கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு மளிகைக் கடையின் பெயருடன் ரூ.2,000 என அச்சிடப்பட்டு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.
இந்த டோக்கனுடன் கும்பகோணம் பெரிய கடைத் தெருவில் உள்ள மளிகைக் கடை ஒன்றுக்குப் பலரும் சென்று ரூ.2,000-க்கு பொருள்களைக் கேட்டனர். ஆனால், இந்த டோக்கனுக்கும் எங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை எனக் கடை உரிமையாளர் கே.ஷேக் முகமது கடைக்கு வந்தவர்களிடம் கூறி அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டார். மேலும் கடை வாசலில் வேட்பாளர்கள் கொடுத்த டோக்கனுக்கும் எங்களுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை என்றும், இந்த டோக்கனுக்கு எங்கள் கடை எந்தப் பொறுப்பும் ஏற்காது எனவும் அச்சிட்டு ஒட்டினார்.
இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு காவல்துறைக்கு மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருமான ம.கோவிந்த ராவ் உத்தரவிட்டார்.
இதன்பேரில் நடைபெற்ற விசாரணையில் கொரநாட்டுக் கருப்பூரைச் சேர்ந்த அமமுக கிளை கழகச் செயலாளர் கனகராஜ் (62) மீது கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.