மதுரை சித்திரைத் திருவிழா தொடங்கவிருக்கும் நிலையில் எந்த முன்னேற்பாடுகளும் நடைபெறாமல் காணப்படும் கள்ளழகர் இறங்கும் வைகை ஆறு. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

மதுரை சித்திரைத் திருவிழா இந்த ஆண்டாவது நடைபெறுமா?- அரசின் உத்தரவுக்காக காத்திருக்கும் அதிகாரிகள்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரையில் சித்திரைத் திருவிழா தொடங்க இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் அதற்குரிய ஏற்பாடுகளுக்கான அறிகுறி ஏதும் தென்படாததால் இந்த ஆண்டாவது திருவிழா நடக்குமா என்ற சந்தேகம் பக்தர்களிடம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் கொண்டாடப்படும் பாரம்பரியத் திருவிழாக்களில் மதுரை சித்திரைத் திருவிழா பிரசித்திப் பெற்றது. பழமையான நகரான மதுரையில் மீனாட்சியம்மன் கோயில் திருவிழாவும், அதைத் தொடர்ந்து நடைபெறும் கள்ளழகர் திருவிழாவும் இரட்டை விழாக்களாக மதுரைக்குப் பெருமை சேர்க்கின்றன.

கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் (2019 ஏப்.18) சித்திரைத் திருவிழா நாளில் மக்களவைத் தேர்தல் நடந்தது. அதற்கு முந்தைய நாளான ஏப்.17-ல் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், தேர்தல் நாளான 18-ல் தேரோட்டமும் மறுநாள் 19-ம் தேதி வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவமும் நடைபெற்றன.

அதனால், மக்கள் வாக்களிப்பதில் பெரிதும் ஆர்வம் காட்டாமல் சித்திரைத் திருவிழாவில் பங்கேற்றதால் வாக்குப்பதிவு சதவீதம் மதுரையில் குறைந்தது. கடந்த ஆண்டு கரோனாவை காரணம் காட்டி சித்திரைத் திருவிழா நடக்கவில்லை.

இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா ஏப்.15-ம் தேதி தொடங்குகிறது. ஏப்.24-ல் திருக்கல்யாணம், ஏப்.25-ல் தேரோட்டம், ஏப்.26 எதிர்சேவை, 27-ம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்.6-ம்தேதி நடந்ததால் இதுவரை அதற்கான ஏற்பாடுகளிலேயே அதிகாரிகள் கவனம் செலுத்தினர். தற்போது தேர்தல் முடிந்ததால் இந்து அறநிலையத் துறையும், மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் சித்திரைத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளைத் தொடங்குவார்களா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஆனால், அரசுத் தரப்பில் இருந்து இதுவரை எந்த உத்தரவும் வராததால் மதுரையில் சித்திரைத் திருவிழா ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ளாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால், திருவிழா நடக்குமா? அல்லது கரோனா தொற்று அச்சம் நிலவுவதால் கடந்த ஆண்டைப்போல் விழாவை நடத்தாமல் விட்டுவிடுவார்களா என்ற ஆதங்கம் பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சித்திரைத் தேரோட்டம் நடைபெறும் மாசி வீதிகள் திருவிழாவுக்கு முன்பு சீரமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த வீதிகளில் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தற்போது வரை நிறைவடையவில்லை. கீழ மாசி, வடக்கு மாசி வீதிகளில் முடியாமல் உள்ள ‘ஸ்மார்ட் சிட்டி’ சாலைப் பணிகளை தற்போது வேகமாக முடித்தால்தான் தேர் இந்த வீதிகளில் உலா வர முடியும்.

இதுகுறித்து இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சித்திரை திருவிழா கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள்படி நடத்தப்படும். ஆனால், அரசுத் தரப்பில் இருந்து இதுவரை எந்த உத்தரவும் வரவில்லை. அதற்காகக் காத்திருக்கிறோம்’’ என்றனர்.

SCROLL FOR NEXT