திண்டுக்கல் அருகேயுள்ள காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக டாக்டர் எஸ்.மாதேஸ்வரன் நேற்று பொறுப்பேற்றார்.
காந்திகிராமத்தில் உள்ளது காந்திகிராம கிராமியப் பல்கலைகழகம். இங்கு துணைவேந்தராக பணிபுரிந்த நடராஜன், 2019 மே 19- ல்ஓய்வு பெற்றார். இதையடுத்து துணைவேந்தர் பணியிடம் காலியாக இருந்தது.
இந்நிலையில் காந்திகிராமப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக டாக்டர் எஸ்.மாதேஸ்வரனை, பல்கலைக்கழக வேந்தர் அண்ணாமலை நியமித்தார். இதையடுத்து அவர் நேற்று மாலை பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு பல்கலை. பதிவாளர் சிவக்குமார், பேராசிரியர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
கர்நாடக திட்டக்குழுவில் பொறுப்பு
ஈரோடு மாவட்டம், கூகலூரைசேர்ந்த டாக்டர் எஸ்.மாதேஸ்வரன், பெங்களூருவில் உள்ள சமூகப் பொருளாதார ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர், கர்நாடகமாநில அரசின் திட்டக்குழு உறுப்பினர், இந்திய சமூக அறிவியல் கழகத்தின் தென்மண்டல ஆலோசகர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார்.
இவர், பொருளாதாரம் சார்ந்த ஆய்வுகளுக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். சர்வதேச நிறுவனங்களுக்காக பொருளாதாரம் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். இதுவரை 106 ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற பொருளாதார கருத்தரங்குகளில் பங்கேற்று பேசியுள்ளார். இவர்,5 ஆண்டுகாலம் காந்தி கிராமப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பொறுப்பு வகிப்பார்.
கால்நடை மருத்துவ பல்கலை
இதேபோன்று, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் கே.என்.செல்வகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் கே.என்.செல்வகுமாரை, பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். டாக்டர் கே.என்.செல்வகுமார், தான் பதவியேற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகள் அப்பதவியில் இருப்பார்.
32 ஆண்டாக கற்பித்தல் பணி
கால்நடை மருத்துவ பல்கலைக்கழக மூத்த பேராசிரியரான செல்வகுமார், ஆசிரியர் பணியில் 32 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி டீன், கால்நடை பராமரிப்புத் துறை தொழில்நுட்பக் கண்காணிப்புக்குழு உறுப்பினர், பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி, தொலைதூரக் கல்வி இயக்குநர், கல்விக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார்.
தேசிய மற்றும் சர்வதேச ஆய்விதழ்களில் ஆய்வுக்கட்டுரைகள் பல எழுதியுள்ளார். எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்துடன் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம், கூட்டு ஆராய்ச்சி பணியில் ஈடுபட பெரிதும் உறுதுணையாக இருந்தவர்.
இவ்வாறு ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.