தமிழகம்

கோடை வெயிலின் தாக்கத்தால் மண் பானை விற்பனை அதிகரிப்பு

செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த ஜனவரி முதலே கடும் வெப்பம் நிலவி வருகிறது. நாளுக்கு நாள் அதன் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கடும் வெயிலால் ஏற்படும் உடல் சூட்டை தணிக்க இளநீர், நுங்கு, பதநீர், தர்பூசணி, கம்பங்கூழ், எலுமிச்சை ஜூஸ் உள்ளிட்டவற்றுக்காக, சாலையோரக் கடைகளை பொதுமக்கள் நாடி வருகின்றனர்.மேலும் பாரம்பரியமுறையில் மண் பானை குடிநீரைக் குடிக்கவும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘இந்த ஆண்டு வழக்கத்தைவிட கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதற்கு ஏற்ப நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. உடல் சூடு காரணமாக சரும பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளன. அதனால், அதிக அளவு நீர் பருக வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். குளிர்சாதனங்கள் வைத்து பருகும் குடிநீரால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படும். அதற்கு மாற்றாக மண்பானை குடிநீர் அனைவருக்கும் உகந்ததாக இருக்கும். நவீன வரவுக்கு ஏற்ப பானைகளில் எளிதாக குடிநீர் பிடிக்க குழாய் பொருத்தியே விற்பனை செய்யப்படுகின்றன. 6 லிட்டர், 12 லிட்டர் அளவுகளில் தேவைக்கேற்ப கிடைக்கிறது. இதில்ஊற்றப்படும் தண்ணீர் 6 மணி நேரத்தில் குடிப்பதற்கு ஏற்றகுளுகுளு தன்மையை அடைகிறது" என்றனர்.

மண்பானை விற்பனையாளர்கள் கூறும்போது, "முன்பைவிட மண்பாண்டங்களுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. ஜனவரி மாதம் முதல் மண் பானைகளின் தேவை அதிகரித்துள்ளதால், வெளியூரில் உற்பத்தி செய்த பானைகளை விற்பனை செய்து வருகிறோம். 4 லிட்டர் கொண்ட பானை ரூ.250, 8 லி ரூ.350, 10 லி ரூ.500, 12 லி ரூ.600 மற்றும் 15 லிட்டர் அளவுகளில் கிடைக்கும்.

இதுதவிர கம்பங்கூழ் பானைகள் ரூ.250 முதல் ரூ.500 வரை விற்பனையாகின்றன. குத்து சட்டி, வடசட்டி, மீன் சட்டி, குருவிக் கூடுகள், குழந்தைகளுக்கான பொம்மைகள் என பல வகையிலும் மண்ணால் ஆன பொருட்களை விற்பனை செய்து வருகிறோம்" என்றனர்.

SCROLL FOR NEXT