சங்ககால மன்னன் அதியமானின் பெயர் பொறித்த நாணயம் கிடைத்துள்ளதாக தென்னிந்திய நாணயவியல் கழகத் தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்ப தாவது:
சங்ககால குறுநில மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சி. அவனது ஊர் தகடூர். அதன் இப் போதைய பெயர் தருமபுரி. அவ்வையாருக்கு நெல்லிக்கனியை அளித்த அவன், மழவர் இனத்தைச் சேர்ந்தவன். அவனது முன்னோர், முற்றிலும் நீரால் சூழப்பட்ட பகுதி யில் இருந்து வந்ததாகக் கருதப் படுகின்றனர்.
தற்போது பாகிஸ்தானில் ஓடும் ஜீலம், சீனாப், ரவி ஆகிய நதிகளின் இடைப்பட்ட வளமான பகுதியை ‘மாலவாஸ்’ பழங்குடியினர், தொன் மைக் காலத்தில் ஆட்சி செய்துள் ளனர். கிரேக்க பேரரசன் அலெக் சாண்டர் படையெடுத்தபோது, போரில் தோல்வியுற்ற அவர்கள், தங்கள் நாட்டைவிட்டு, ராஜஸ்தான் வழியாக மத்திய இந்தியாவுக்கும், பிறகு மற்ற பகுதிகளுக்கும் குடிபெயர்ந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கும், அதியமானின் முன்னோர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று ஒரு கருத்து உள்ளது.
அதியமானின் பெயர் பொறித்த நாணயம் ஒன்றை கடந்த ஆண்டு வெளியிட்டேன். கடந்த ஆண்டு கிடைத்த இன்னொரு செம்பு நாணயத்தை சுத்தம் செய்து பார்த்தபோது, அதன் முன்புறத்தில் ஒரு யானை வலதுபக்கம் நோக்கி நிற்கிறது. அதன் முன்பு ஒரு கொடிக் கம்பம், இடதுபக்க மேல் விளிம்பில் ‘ஸ்வஸ்திக்’ சின்னம், அருகில் ‘டவுரின்’ சின்னம், யானையின் மேல் பகுதியில், ‘அதியமான்’ என்ற பெயர் ஆகியவை உள்ளன. இப்பெயரில் 4 எழுத்துக்கள் ‘பிராமி’ முறையிலும், ஓர் எழுத்து ‘தமிழ் பிராமி’ முறையிலும் உள்ளன.
நாணயத்தின் பின்புறத்தின் அடிப் பகுதியில் ஒரு ஆற்றின் உருவம், அதில் 2 மீன்கள், மத்தியில், வலது பக்கம் நோக்கி நிற்கும் குதிரை, அதன் முன்னால் ஒரு போர் வீரன், அவன் கைகளில் கேடயம், வாள் ஆகியவை உள்ளன. அவன் தலை யில் உள்ள கவசத்தில், கிரேக்க வீரர்கள் அணியும் அலங்கார முடி அமைப்பு உள்ளது. நாணயத்தின் பின்புறமும் ‘அதியமான்’ என்ற பெயர் காணப்படுகிறது. இந்த நாணயத்தின் காலம் கி.மு. 3-ம் நூற்றாண்டாக இருக்கலாம். நமது தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் நாணயங்களில் இதுவும் ஒன்று.
இவ்வாறு இரா.கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.