தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் பாளை யங்கோட்டையில் இந்த சட்டப்பேரவை தேர்தலிலும் குறைவான வாக்குகளே பதிவாகி யிருக்கின்றன.
பாளையங்கோட்டை சட்டப் பேரவை தொகுதி பெரும்பாலும் நகர்ப்புறம் சார்ந்துள்ளது. இங்கு அரசு, தனியார் துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், வணிகர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அதிகளவில் வசிக்கின்றனர். ஏராளமான பள்ளி, கல்லூரிகளும் இங்கு அமைந்துள்ளன. இதனால் கற்றவர்கள் மிகுந்த பகுதி யாக பாளையங்கோட்டை விளங்கு கிறது.
42% பேர் வாக்களிக்கவில்லை
சிறப்புமிக்க இந்த தொகுதி யில் மாவட்டத்திலுள்ள மற்ற தொகுதிகளுடன் ஒப்பிடுகை யில் கடந்த பல தேர்தல்களில் வாக்களிக் கும் சதவீதம் குறைந்துவருகிறது. இம்முறையும் அவ்வாறே வாக்குப்பதிவு குறைந்திருக்கிறது. கடந்த 2011 சட்டப் பேரவை தேர்தலில் இத் தொகுதியில் 68.71 சதவீத வாக்குகளும், 2014-ல் மக்களவை தேர்தலில் இத் தொகுதியில் 59.90 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. 2016 சட்டப்பேரவை தேர்தலில் 60.07 சதவீத வாக்குகள் பதிவாகி யிருந்தன. இம்முறை 57.76 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருக்கின்றன. இத் தொகுதியில் மொத்தம் 2,73,379 வாக்குகள் உள்ள நிலையில், 1,57,915 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருக்கின்றன. 42 சதவீதத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க வரவில்லை.
என்ன காரணம்?
இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. கரோனா அச்சம் காரணமாக பெரும்பாலா னோர் வாக்குச் சாவடிகளுக்கு வரவில்லை. ‘கரோனா நோயாளி களும் வாக்குச் சாவடிகளில் பேனாவால் கையெழுத்திடுவர் எனவே, நீங்களே பேனாவை எடுத்துச் சென்றுவிடுங்கள்’ என்று வாட்ஸ்அப் மூலம் தகவல்கள் பரப்பப்பட்டன.
இதுபோன்ற அச்சமூட்டும் தகவல்கள் பலரை வாக்குச் சாவடிகளுக்கு வராமல் செய்துவிட்டது. சுட்டெரிக்கும் வெயில் அடுத்த முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. பாளையங்கோட்டையில் கடந்த சில நாட்களாகவே 100 டிகிரிக்கும் மேல் வெயில் சுட்டெரிக்கிறது. வெயிலில் வரிசையில் நின்று வாக்களிக்க வாக்காளர்கள் பலர் தயாராக இல்லை. மேலும் இம்முறை வாக்குச் சாவடிகளை ஆண்கள், பெண்கள் என்று தனித் தனியாக பிரித்தது, வாக்குச் சாவடிகளை வேறுஇடங்களுக்கு மாற்றியது போன்றவையும் காரணமாக இருக்கிறது.
வேட்பாளர்கள் வரவில்லை
பாளையங்கோட்டையில் கடந்த தேர்தல்களைப்போல் இம்முறை தேர்தல் திருவிழா களைகட்ட வில்லை. வீடுவீடாகச் சென்று வாக்குசேகரிப்பது என்பதையே வேட்பாளர்கள் மறந்துவிட்டனர். வேட்பாளர்களின் பிரதிநிதிகளோ, கட்சியினரோ வீடுதோறும் சென்று வாக்கு சேகரிப்பதற்கு பதிலாக வீடுகள்தோறும் துண்டு பிரசுரங்களை மட்டும் வீசிவிட்டு சென்றனர்.
தேர்தல்கள்தோறும் இத் தொகுதியில் மிகவும் குறைவாக வாக்குப்பதிவு நடைபெறும் தியாகராஜ நகர், மகாராஜ நகர், சாந்திநகர், என்.ஜி.ஓ. காலனி பகுதிகளில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருந்தன.
ஆனாலும் கடந்த தேர்தலைவிட இம்முறை வாக்குப்பதிவு குறைந் திருக்கிறது.
வருத்தமான விஷயம்
இது தொடர்பாக சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான பிரம்மா கூறும்போது, “ஜனநாயகத் தின் மீது இங்குள்ளவர்களுக்கு நம்பிக்கை குறைய ஆரம்பித்து விட்டது. அனைத்து வசதிகளும் கிடைத்துவிடும் என்பதால் ஏன் வாக்களிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். படித்தவர்கள், பணிபுரிவோர் வாக்களிக்கும் கடமையை மறந்துவிடுவது வருத்தமான விஷயம்” என்று தெரிவித்தார்.