சென்னை, முகப்பேர் வாக்குச்சாவடிக்கு வந்த அமைச்சர் பெஞ்சமின் வாக்குப்பதிவைச் சீர்குலைக்க முயன்றதாகவும், அதுகுறித்துக் கேட்ட தன்னையும், பொதுமக்களையும் அவதூறாகப் பேசியதாகவும் திமுக இளைஞரணி நிர்வாகி அளித்த புகாரின் பேரில் ஜெ.ஜெ.நகர் போலீஸார் 2 பிரிவுகளின் கீழ் பெஞ்சமின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்காக மதுரவாயல் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட முகப்பேர் கிழக்கில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்தில் தமிழக அமைச்சரும், மதுரவாயல் தொகுதி அதிமுக வேட்பாளருமான பெஞ்சமின், தனது ஆதரவாளர்கள் சுமார் 25 பேருடன் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்தார்.
அப்போது வாக்குப்பதிவு மையத்துக்குள் நுழைந்து வாக்காளர்களுக்கு இடையூறு செய்வதாக அங்கிருந்த திமுக நிர்வாகி நவராஜ் என்பவர் அமைச்சர் பெஞ்சமினைக் கேட்டுள்ளார். அப்போது அமைச்சர் பெஞ்சமின் அங்கிருந்தவர்களை நோக்கி அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. அவரது பேச்சு வாட்ஸ் அப்பில் வைரலானது. ஒரு அமைச்சர் இப்படிப் பேசுவாரா? எனப் பலரும் விமர்சித்தனர்.
அதிக அளவில் ஆட்களை அழைத்துக்கொண்டு வாக்குச்சாவடிக்கு வந்து வாக்காளர்களை அவதூறாகப் பேசியதாக திமுக மதுரவாயல் வடக்குப்பகுதி இளைஞரணி அமைப்பாளர் நவராஜ் (36), ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அந்தப் புகாரின் பேரில் போலீஸார், அமைச்சர் பெஞ்சமின் மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும் ஐபிசி 143 (அனுமதி இன்றிக் கூடுதல்) 294 (பி) (அவதூறாகப் பேசுதல்) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.