தமிழகத்திலேயே அதிக சதவீத வாக்குப்பதிவால் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தொடர்ந்து 5-வது முறையாக அமைச்சர் கே.பி.அன்பழகன் வெல்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நடந்த வாக்குப்பதிவில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதியின் வாக்குப்பதிவு சதவீதம் முதலிடத்தில் உள்ளது. 2 லட்சத்து 36 ஆயிரத்து 843 வாக்காளர்களைக் கொண்ட இந்த தொகுதியில் 2 லட்சத்து 7058 வாக்காளர்கள் நேற்று தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். அதாவது 87.37 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இதன் மூலம் இந்தத் தொகுதி தமிழகத்தின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்துள்ளது.
இந்தத் தொகுதியில், அதிமுக சார்பில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் போட்டியிட்டார். திமுக சார்பில் வழக்கறிஞர் பி.கே.முருகன் போட்டியிட்டார். இதுதவிர, மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் மாநிலச் செயலாளரான வழக்கறிஞர் ராஜசேகர் போட்டியிட்டார். அமமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயசங்கர், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைச்செல்வி ஆகியோரும் போட்டியிட்டனர். இவர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட பாலக்கோடு தொகுதியில் மொத்தம் 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
பாலக்கோடு தொகுதியில் 2001, 2006, 2011, 2016 ஆகிய 4 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு, தொடர்ந்து வெற்றி பெற்றவர் கே.பி.அன்பழகன். 5-வது முறையாக அதே தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். 2016 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு 5,983 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டவர் பி.கே.முருகன். அவரே இந்த முறையும் போட்டியிட்டார்.
பாலக்கோடு தொகுதியை அதிமுகவின் கோட்டை என்ற அளவில் உறுதியாக்கி வைத்திருக்கிறோம் என்ற எண்ணத்துடன் அதிமுகவினர் பிரச்சாரக் களத்தில் சுழன்றனர். தொடர்ந்து 4 முறை எம்எல்ஏவாக இருந்தும் தொகுதிக்கு, சொல்லிக்கொள்ளும்படியாக கே.பி.அன்பழகன் எதையும் செய்துவிடவில்லை என்ற குற்றச்சாட்டுடன் திமுகவினர் பணியாற்றினர்.
இவ்விரு தரப்பில் யாருடைய பிரச்சாரம் தொகுதி வாக்காளர்களின் இதயங்களைத் தொட்டது என்பதை மே 2-ம் தேதி அறிந்து கொள்ளலாம். அதே நேரம், தமிழகத்தில் முதலிடம் பிடிக்கும் அளவுக்கு பாலக்கோடு தொகுதியில் வாக்குப்பதிவு நடந்துள்ளதால் தொகுதியின் இரு பிரதானக் கட்சி வேட்பாளர்கள் தரப்பும், யாருக்கு வெற்றி என்பதில் அச்சம் அடைந்துள்ளனர்.