கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த கனிமொழி குணமடைந்ததால் மருத்துவமனையிலிருந்து இன்று இல்லம் திரும்பினார். அவரை மகளிர் அணியினர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். 5 நாட்கள் எந்தப் பணியிலும் ஈடுபடாமல் தனிமைப்படுத்திக் கொள்கிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைமுறை தொடங்கும் முன்னரே கடந்த நவம்பர் மாதமே ஸ்டாலின் தூதுவர்கள் எனத் திமுகவின் முன்னணி நிர்வாகிகள், நட்சத்திரப் பேச்சாளர்கள் பிரச்சாரத்தைத் தொடங்கினர். அதில் முக்கியமானவர் திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி.
தமிழகம் முழுவதும் தொடர்ந்து சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார் கனிமொழி. தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தொகுதி தொகுதியாகச் சென்று திமுக, கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்குச் சேகரித்தார்.
கரோனா தொற்று குறைந்திருந்த காலத்தில் பிரச்சாரத்தை ஆரம்பித்த கனிமொழி, மீண்டும் இரண்டாம் அலை அடிக்கத் தொடங்கிய நேரத்திலும் பிரச்சாரத்தைத் தொடர்ந்தார். இந்தக் காலகட்டத்தில் திமுக, அதிமுக, தேமுதிகவின் பல வேட்பாளர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது.
இந்நிலையில் கடைசியாக பாளையங்கோட்டையில் கனிமொழி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். பின்னர் அவர் சென்னை திரும்பினார். அவருக்கு உடல் சோர்வு இருந்த நிலையில் கரோனா பரிசோதனை செய்தபோது கரோனா தொற்று இருப்பது உறுதியானது. தேர்தல் பிரச்சாரம் முடிய ஒருநாள் இருக்கும் நிலையில், அவர் கரோனா தொற்று காரணமாகத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
நேற்று வாக்குப்பதிவு தினத்தில் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற, மருத்துவமனையிலிருந்து முழுக் கவச உடையுடன் ஆம்புலன்ஸ் மூலம் வந்து வாக்களித்தார். பின்னர் மீண்டும் ஆம்புலன்ஸில் புறப்பட்டு மருத்துவமனைக்குச் சென்றார்.
இந்நிலையில் கரோனா சிகிச்சையில் குணமடைந்த காரணத்தால் கனிமொழி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இன்று வீட்டுக்கு வந்தார். அவரை மகளிர் அணியினர் வீட்டு வாசலில் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.
மருத்துவர்கள் ஆலோசனைப்படி கனிமொழி எந்தப் பணியிலும் ஈடுபடாமல், 5 நாட்கள் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்கிறார்.