படத் தயாரிப்புக்காகத் தனியார் நிறுவனத்திடம் பெற்ற கடனைத் திரும்பச் செலுத்தவில்லை எனத் தொடரப்பட்ட வழக்கில், சரத்குமார், ராதிகா உள்ளிட்ட மூவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேல்முறையீடு போவதாக மனு அளித்ததன் பேரில் மூவர் தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டது.
நடிகை ராதிகா, சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடிகர் விக்ரம் பிரபு, நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த படம் 'இது என்ன மாயம்’. இந்தப் படத் தயாரிப்புக்காக ராடியன்ஸ் என்ற நிறுவனத்திடம் 2014ஆம் ஆண்டு ஒன்றரை கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தனர்.
இந்தப் பணத்தை 2015 மார்ச் மாதத்திற்குள் திருப்பித் தருவதாக 7 காசோலைகள் கொடுத்து உறுதி அளித்திருந்தனர். பணத்தைக் கொடுக்காத பட்சத்தில் படத்தின் தொலைக்காட்சி உரிமை அல்லது அடுத்து எடுக்கக்கூடிய படத்தின் உரிமையைத் தருவதாகவும் உத்தரவாதம் அளித்திருந்தனர்.
இந்நிலையில் கூடுதலாக ஒரு கோடி ரூபாய் கடன் கேட்டு தியாகராய நகரில் உள்ள சொத்துகளை சரத்குமார் மற்றும் ராதிகா அடமானமாகக் கொடுத்திருந்தனர். வங்கியில் பணம் செலுத்தாததால் 7 காசோலைகளும் திரும்பி வந்தன. இதனால் அவர்களுக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்குத் தொடரப்பட்டது.
பின்னர் அந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலிசியா இன்று தீர்ப்பளித்தார். அப்போது மீடியா டிரீம்ஸ் பங்குதாரர்களான சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டதால் நடிகை ராதிகா சரத்குமார் ஆஜராக இயலவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 7 வழக்குகளிலும் தீர்ப்பளித்த நீதிபதி அலிசியா, 2 வழக்குகளில் தொடர்புடைய சரத்குமார், ராதிகா, லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோருக்குத் தலா ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். இந்த இரு வழக்குகளில் மூவருக்கும் மொத்தமாக 2 கோடியே 80 லட்ச ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.
சரத்குமார் மீதான மற்ற 5 வழக்குகளில் தலா ஒரு வருட சிறையும், மொத்தமாக 3 கோடியே 30 லட்ச ரூபாய் அபராதமும் விதித்துள்ளார். தீர்ப்பின்போது ஆஜராகாத ராதிகாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தும் உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை ஏற்ற நீதிபதி, ஒரு வருட சிறை தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.