கோவை தடாகம் சாலையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையமான அரசு தொழில்நுட்பக் கல்லூரிக்கு இன்று காலை வந்த மநீம தலைவர் கமல்ஹாசன். படங்கள் : ஜெ.மனோகரன். 
தமிழகம்

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் ஆய்வு 

டி.ஜி.ரகுபதி

கோவை அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று காலை ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. 4,427 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நேற்று முடிந்தது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதற்கான பெட்டியில் போடப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

பின்னர், சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடங்கிய அந்தப்பெட்டிகள் லாரிகளில் ஏற்றப்பட்டு, தடாகம் சாலையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையமான அரசு தொழில்நுட்பக் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு தொகுதி வாரியாக ஏற்படுத்தப்பட்டுள்ள காப்பு அறைகளில் மேற்கண்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடங்கிய பெட்டிகள் வைக்கப்பட்டு வருகின்றன.

இப்பணிகளை மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், கோவை தெற்கு தொகுதி வேட்பாளருமான கமல்ஹாசன் இன்று (7-ம் தேதி) காலை நேரில் பார்வையிட்டார்.

தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரிக்கு கமல்ஹாசன் சென்றார். நுழைவாயிலில் இருந்து உள்ளே காப்பு அறைக் கட்டிடங்கள் வரை லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தன.

இதனால் நுழைவாயிலில் இருந்து உள்ளே, காப்பு அறைக்கு கமல்ஹாசன் நடந்து சென்றார். அங்கு தெற்கு தொகுதிக்குட்பட்ட காப்பு அறையை பார்வையிட்டார்.

சிறிது நேரத்துக்கு பின்னர் வளாகத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் நுழைவாயில் அருகே வந்த கமல்ஹாசன், நுழைவாயில் அருகே நின்றிருந்த தனது காரில் ஏறி ஹோட்டலுக்குச் சென்றார்.

SCROLL FOR NEXT