கோவை சாரமேடு கிரெசன்ட் மெட்ரிக் பள்ளியில் முகக்கவசம் மற்றும் இடைவெளி யின்றி வரிசையில் நின்ற வாக்காளர்கள். படம்: ஜெ.மனோகரன் 
தமிழகம்

தனிநபர் இடைவெளியின்றி வாக்களித்த மக்கள்: வாக்குச்சாவடிகளில் கரோனா தடுப்பு விதிகள் கடைபிடிப்பதில் அலட்சியம்

டி.ஜி.ரகுபதி

கரோனா பரவல் காலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடப்பதால், வாக்குச்சாவடிகளில் கரோனா தொற்று தடுப்பு வழிமுறைகளை, வாக்காளர்கள், வாக்குச்சாவடி மைய ஊழியர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், முகக்கவசங்கள், கிருமி நாசினி, தெர்மல் ஸ்கேனர்கள், கவச உடை உள்ளிட்ட கரோனா தடுப்புஉபகரணங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

வாக்குச்சாவடிக்குள் நுழைந்தவாக்காளர்களுக்கு நுழைவு வாயிலில் வைத்தே தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யவேண்டும். கிருமிநாசினி அளித்து கை கழுவிய பின்னர், வலது கைக்கான கையுறை வழங்கவேண்டும். முகக்கவசம் இல்லாதவர்களுக்கு முகக்கவசம் இலவசமாக வழங்க வேண்டும். வாக்காளர்கள் உரிய இடைவெளி விட்டு நிற்கவேண்டும் என தேர்தல் ஆணையம்அறிவுறுத்தி இருந்தது. ஆனால் கோவை மாவட்டத் தில் பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் இந்த விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை.

சிங்காநல்லூர் தொகுதிக் குட்பட்ட ஆவாரம்பாளையம் சாலை ஏபிசி மெட்ரிக் பள்ளி, பெருமாள் கோயில் பின்புறம் உள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, பயனீர் மில் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஒண்டிப்புதூர் மாநகராட்சி ஆண்கள் பள்ளி, சூலூர் தொகுதிக்குட்பட்ட இருகூர் பஞ்சாயத்து யூனியன்தொடக்கப்பள்ளி, கண்ணம்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, சூலூர் பெண்கள்மேல்நிலைப்பள்ளி, கருமத்தம் பட்டி புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளி, சாரமேடு கிரெசன்ட் மெட்ரிக்பள்ளி, கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட புலியகுளம் அரசு மகளிர் கல்லூரி, தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி தொடக்கப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மதுக்கரைஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகள் மற்றும் கவுண்டம்பா ளையம், மேட்டுப்பாளையம், கோவை வடக்கு தொகுதிகளில் உள்ள பல்வேறு அரசுப் பள்ளி வாக்குச்சாவடிகளில் கரோனா தடுப்பு விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன.

சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பதையும், தனி நபர் இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பதையும் வாக்குச்சாவடி மைய அலுவலர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் கண்டுகொள்ள வில்லை. சில இடங்களில் ஊழியர்கள் கூறினாலும் வாக்காளர்கள் அதை கேட்கவில்லை. மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்துவரும் சூழலில், வாக்காளர்களின் இந்த அலட்சியப் போக்கு, தொற்று பரவலை மீண்டும் அதிகரித்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முதலில் வந்த வாக்காளர்களுக்கு சில இடங்களில் கையுறை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது,‘‘தேர்தல் பயன்பாட்டுக்காக 4,652 தெர்மல் ஸ்கேனர்கள், 30,567 கிருமிநாசினி பாட்டில்கள், 48,730 ஷீல்டு வகை முகக்கவசங்கள், வாக்குச்சாவடி ஊழியர்களுக்கான 2.92 லட்சம் முகக்கவசங்கள், வாக்காளர்களின் பயன்பாட்டுக்காக 1.32 லட்சம் முகக்கவசங்கள், 36.78 லட்சம் கையுறைகள், கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள வாக்காளர்கள் வாக்களிக்க 59,773 முழு கவச உடைகள் வழங்கப்பட்டிருந்தன’’ என்றனர்.

SCROLL FOR NEXT