தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் அவரது மனைவி முனைவர் வனிதா அகர்வால் மற்றும் மகள் அக்க்ஷிதா அகர்வால் ஆகியோருடன் திருவல்லிக்கேணி, எல்லீஸ்புரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று காலை வரிசையில் நின்று வாக்களித்தார். 
தமிழகம்

சென்னையில் வாக்குப்பதிவு மையங்களில் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் ஆய்வு

செய்திப்பிரிவு

சென்னையில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுகிறதா என்று வாக்குச்சாவடிகளில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு மேற்கொண்டார்.

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, சென்னையில் 23,500 போலீஸார், மத்திய துணை ராணுவப் படையினர், ஓய்வுபெற்ற காவல் துறையினர் என சுமார் 30 ஆயிரம் பேர் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்குச்சாவடிகளுக்கு தகுந்தவாறு போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். பதற்றமான பகுதிகளில் துணை ராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.

சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், தனது மனைவி வனிதா அகர்வால், மகள் அக்‌ஷிதா அகர்வால் ஆகியோருடன் திருவல்லிக்கேணி எல்லீஸ்புரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று நேற்று காலை வாக்களித்தார்.

பின்னர் கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் உயர்நிலைப் பள்ளி, மயிலாப்பூர் உருது ஆண்கள் தொடக்கப் பள்ளி, ராயப்பேட்டையில் உள்ள இந்திய அலுவலர்கள் சங்க வளாகம், மயிலாப்பூர் சாந்தோம் உயர்நிலைப் பள்ளி, ராஜா அண்ணாமலைபுரம் ராணி மெய்யம்மை பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்ற ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். முகக்கவசம் அணியாத வாக்காளர்களுக்கு முகக் கவசங்கள், கையுறைகளை வழங்கினார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாருக்கு பிஸ்கட் பாக்கெட், குடிநீர் பாட்டில்களை வழங்கினார்.

கீழ்ப்பாக்கம் புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் ஆய்வு செய்தபோது, நீண்ட தலைமுடியுடன் வாக்காளர்களை அச்சுறுத்தும் வகையில் நின்றிருந்த இளைஞரை அங்கிருந்து உடனடியாக கிளம்புமாறு எச்சரித்து அனுப்பினார். ராயப்பேட்டையில் நடந்த ஆய்வின்போது அனுமதியின்றி வாக்குப்பதிவு மையத்துக்குள் நிறுத்தப்பட்டிருந்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவரது காரை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.

அமைதியான வாக்குப்பதிவு

சென்னையில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் ‘‘சென்னையில் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை. மக்கள் எந்தவிதமான அச்சுறுத்தல்களும் இன்றி தங்கள் வாக்குகளை அமைதியான முறையில் பதிவு செய்தனர். நான் பெரும்பாலான வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன். கரோனாதடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தது. சென்னையில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது’' என்றார்.

SCROLL FOR NEXT