தமிழகம்

திமுகவினரை தரக்குறைவாக பேசியதாக வைரலாகும் வீடியோ: அமைச்சர் பெஞ்சமின் மறுப்பு

செய்திப்பிரிவு

திமுகவினரை தரக்குறைவாக அமைச்சர் பெஞ்சமின் பேசியதாகக் கூறப்படும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இக்குற்றச்சாட்டை பெஞ்சமின் மறுத்துள்ளார்.

மதுரவாயல் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் பெஞ்சமின், நேற்று நொளம்பூரில் உள்ளஒரு வாக்குச்சாவடி மையத்தை நேரில் ஆய்வு செய்ய சென்றார். அப்போது, அங்கு அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சமூக வலைதளத்தில்..

இதில், அமைச்சர் பெஞ்சமின் அங்கிருந்த திமுகவினரை தரக்குறைவாக பேசியதாகக் கூறப் படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதுகுறித்து, அமைச்சர் பெஞ்சமின் செய்தியாளர்களிடம் கூறும்போது, "நான் வாக்குச்சாவடியை ஆய்வு செய்ய சென்றபோது, அங்கிருந்த மாற்றுக் கட்சியினர் சிலர் எனது காரை வழிமறித்தனர். நான் பொறுமையாக இருந்தேன். மேலும், அவர்கள் அங்கிருந்த பெண்களை கிண்டல் செய்தனர். அத்துடன், அவர்களிடம் தகாத முறையில் நடக்க முயன்றனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் என்னிடம் புகார் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, அவர்களை கண்டித்ததோடு, போலீஸிடம் ஒப்படைத்தேன். பெண்களை அவமதிக்கும் வகையில் நடந்ததைத் தட்டிக் கேட்கும் விதமாகத்தான் நான் கண்டித்தேன். நான் இதுவரை யாரையும் தவறாகவோ, மரியாதைக் குறைவாகவோ பேசியதில்லை" என்றார்.

இந்த சம்பவம் காரணமாக, அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT