பழவேற்காடு அருகே அரை நூற்றாண்டுக்கும் மேலாக இரு கிராம மக்கள் மீன்பிடிப் படகில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு, பக்கிங்காம் கால்வாயைக் கடந்து சென்று வாக்களிக்கும் அவல நிலை நீடிக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே உள்ளது தாங்கல்பெரும்புலம் ஊராட்சி. மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டஇந்த ஊராட்சியில் தாங்கல்பெரும்புலம், இடையன்குளம், கருங்காலி, கோரைகுப்பம், சாத்தான்குப்பம் ஆகிய சிறு கிராமங்கள் உள்ளன.
இதில், தாங்கல்பெரும்புலம், இடையன்குளம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பல ஆண்டுகளாக மீன்பிடிப் படகில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு, வாக்களிக்கும் அவலநிலை நீடித்து வருகிறது. இதுகுறித்து தாங்கல்பெரும்புலம், இடையன்குளம் கிராமங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் கூறியதாவது:
பழவேற்காடு அருகே செல்லும் பக்கிங்காம் கால்வாயின் ஒருகரையை ஒட்டியுள்ள தாங்கல்பெரும்புலம் கிராமத்தில், சுமார்300 வாக்காளர்களும், இடையன்குளத்தில் 110 வாக்காளர்களும் வசித்து வருகிறோம். விவசாயிகள் மற்றும் மீனவர்களாகிய நாங்கள், அரை நூற்றாண்டுக்கும் மேலாக மீன்பிடிப் படகில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு, பங்கிங்காம் கால்வாயைக் கடந்து, மறுகரையில் உள்ள சாத்தான்குப்பம்மீனவக் கிராமத்தில் அமைக்கப்படும் வாக்குச்சாவடியில் வாக்களித்து வருகிறோம்.
எனவே, தாங்கல்பெரும்புலம் கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என்றுபல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகிறோம். எனினும், இதுவரை எந்தநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், சுனாமிக் குப் பிறகு கோரைக்குப்பம் கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு சாலைமார்க்கமாக செல்ல வேண்டுமென்றால், பழவேற்காடு, அரங்கம்குப்பம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக சுமார் 11 கிலோமீட்டர் தொலைவுக்கு சுற்றிச்செல்ல வேண்டும். இதனால், கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக மீன்பிடிப் படகில் பயணம் செய்து, பக்கிங்காம் கால்வாயைக் கடந்து, கோரைக்குப்பத்தில் உள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்து வருகிறோம்.
சுமார் அரை மணி நேர மீன்பிடிப் படகு பயணத்தின்போது, காற்றின் வேகம் மற்றும் திடீரென தண்ணீர் அதிகரிப்பது மற்றும் குறைவது உள்ளிட்டவை கார ணமாக, படகு கவிழ்ந்து விபத் துக்குள்ளாகும் அபாயமும் உள்ளது. எனவே, இனியாவது தாங்கல்பெரும்புலம் கிராமத்தில் வாக்குச்சாவடி அமைத்து, எவ்வித இடையூறுமின்றி எங்கள் ஜனநாயகக் கடமையாற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.