மதுரை ஆரப்பாளையம் அருகே உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்த மகிழ்ச்சியில் மையிட்ட விரலைக் காட்டும் ராஜாமணி அம்மாள். 
தமிழகம்

ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த 86 வயது மூதாட்டி

கி.மகாராஜன்

உடல்நலக் குறைவால் படுத்த படுக்கையாக இருக்கும் 86 வயது மூதாட்டி ஒருவர் ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.

மதுரை மத்திய தொகுதிக் குட்பட்ட ஆரப்பாளையம் பகுதி யில் வசித்து வரும் ராஜாமணி அம்மாள் (86). படுத்த படுக்கையாக உள்ளார்.

ஒருமுறை கூட வாக்களிக்கத் தவறாத அவர் அடுத்த தேர்தலுக்கு இருப்பேனா எனத் தெரியாது, எனவே இந்த தேர்தலில் நான் வாக்களிக்க ஏற்பாடு செய்யுங்கள் எனக் குடும்பத்தினரிடம் வேண் டுகோள் விடுத்தார். இது தொடர்பாக ஆட்சியர் த.அன்பழகனிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் ராஜாமணி அம்மாள் வாக்களிக்க ஏற்பாடு செய்யுமாறு செஞ்சிலுவைச் சங்கத்திடம் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து செஞ்சிலுவைச் சங்கச் செயலாளர் கோபால கிருஷ் ணன், ராஜ்குமார், முத்துக்குமார், ராஜ் ஆகியோர் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து ராஜாமணி அம்மாளை ஆரப்பாளையம் பேருந்துநிலையம் அருகேயுள்ள வாக்குச் சாவடி மையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வாக்குச்சாவடி பணியாளர்களும், வாக்காளர்களும் கைகளை தட்டி அவரை உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர் அவர் கூறுகையில், வாக்களிக்க முடியாமல் போய் விடுமோ என்று அஞ்சினேன். ஆனால் வாக்களித்ததை மன நிறைவாக உணர்கிறேன் என்றார்.

SCROLL FOR NEXT