கடம்பூர் அருகே மலைப்பட்டியில் அதிமுக - திமுக முகவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் சுமார் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கடம்பூர் அருகே மலைப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நேற்று முதியவர் ஒருவரை திமுக முகவர் வாக்களிக்க அழைத்து வந்துள்ளார். இதனை பார்த்த அதிமுக முகவர்கள், முதியவரை எப்படி அழைத்து வரலாம் என கேட்டனர்.
அவர்களுக்குள் வாக்குப்பதிவு மையத்துக்குள்ளேயே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பணியில் இருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குப்பதிவு மையத்துக்குள் வாக்குவாதம் செய்யக்கூடாது என்றனர். ஆனால், அவர்களுக்குள் வாக்குவாதம் அதிகரிக்கவே, முகவர்களை வெளியேறும்படி கூறினர்.
இதையடுத்து, அவர்கள் வெளியே சென்றனர். அதன்பின், அடிதடி மோதல் ஏற்பட்டது. கடும் பரபரப்பு காரணமாக காலை 8.45 மணிக்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. தேர்தல் மண்டல அதிகாரி, டிஎஸ்பி சங்கர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின்னர் காலை 9.55 மணிக்கு வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கி நடந்தது. மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் அங்கு வந்து, பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.