தமிழகம்

சுஷ்மா, ஜேட்லி மரணம் குறித்த சர்ச்சைப்பேச்சு: உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

சுஷ்மா சுவராஜ் மரணத்திற்கும், அருண் ஜேட்லியின் மரணத்திற்கும் பிரதமர் மோடியை இணைத்து பேசியதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு எதிராக பாஜக அளித்த புகாரின் பேரில் இன்று (7/4) மாலைக்குள் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையின் போது வேட்பாளர்கள் மற்றும் அவர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ளும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேச இந்திய தேர்தல் ஆணையர் தடை விதித்திருந்தது. ஆனால் இதையும் மீறி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பரப்புரையின் போது பேசப்படுவது தொடர்பாக என தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு புகார்கள் வருகின்றன.

தாராபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில் சுஷ்மா சுவராஜ் மரணம், அருண்ஜேட்லி மரணத்துக்கு பிரதமர் மோடியின் அழுத்தம் காரணம் என்று பேசினார். இதுகுறித்து சர்ச்சை எழுந்த நிலையில் என் தாய் பாஜகவில் சிறப்பாக நடத்தப்பட்டார், உங்கள் அரசியலுக்காக அவரை இழுக்காதீர்கள் என சுஷ்மா சுராஜின் மகள் ட்விட்டரில் உதயநிதிக்கு பதில் அளித்திருந்தார்.

அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்திருந்த உதயநிதி ஸ்டாலின், “ சீனியர்களை ஓரங்கட்டி குறுக்குவழியில் பொறுப்புக்கு வந்ததாக பிரதமர் தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் என்னை விமர்சித்தார். சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு குறுக்குவழியில் பிரதமர் ஆனவர் நீங்கள்தான் என்று வேறொரு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவருக்கு பதிலளித்தேன்.

மற்றபடி பானுஸ்ரீஸ்வராஜின் தாயாரையோ, சோனாலி ஜேட்லியின் தந்தையாரையோ விமர்சிக்கவேண்டும் என்ற அவசியமே எனக்கு இல்லை. நன்றி”. என பதிலளித்திருந்தார்.

இந்நிலையில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையிலான குழு இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புகார் அளித்தனர்.

அதில் “பாஜகவின் மறைந்த தலைவர்களான சுஷ்மா சுவராஜ் , அருண் ஜெட்லி ஆகியோர் பிரதமர் மோடி கொடுத்த நெருக்கடியால் இறந்தனர் என திமுகவின் உதயநிதி ஸ்டாலின் பேசியது தவறான கருத்து மட்டுமல்ல, மக்களை திசை திருப்ப இது போன்ற அவதூறுகளை பேசியுள்ளார்.

தேர்தலுக்கு சற்றும் தொடர்பே இல்லாத அடிப்படையே இல்லாத, பொய்யான கருத்துக்களை பேசி பிரதமரின் தனிப்பட்ட வாழ்க்கையையும், மறைந்த முன்னாள் அமைச்சர்களையும் விமர்சித்துள்ளார், இது தேர்தல் விதிமுறை மீறல் ஆகும். எனவே அவரை தேர்தலில் நிற்காதபடி தகுதி நீக்கம் செய்ய வேண்டும்”. எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த புகாரை பரிசீலித்த தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக விளக்கமளிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

அதில், “தேர்தலுக்கு தொடர்பே இல்லாத தனிப்பட்ட நபர்கள் சம்பந்தப்பட்ட அவதூறு கருத்துக்களை தாராபுரத்தில் பிரச்சாரத்தின் போது பேசியுள்ளீர்கள், இதுதேர்தல் விதிமுறை மீறல் ஆகும். எனவே இது தொடர்பாக நாளை (7/4) மாலை 5 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும்.

விளக்கமளிக்க தவறும்பட்சத்தில் எந்த முன்னறிவிப்பும் இன்றி தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்”. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஆ.ராசா முதல்வர், ஸ்டாலின் ஒப்பீடு என பேசிய பேச்சு சர்ச்சையான நிலையில் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்க அதுகுறித்து ஆ.ராசா விளக்கம் அளித்து, மேலும் விளக்கம் அளிக்க கோரியதை நிராகரித்து 2 நாட்கள் பேச தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT