தமிழகம்

வேலூரில் விஜய் திரைப்பட பாணியில் ஆய்வுக்குரிய வாக்கைப் பதிவு செய்த வங்கி ஊழியர்

வ.செந்தில்குமார்

வேலூரில் கள்ள ஓட்டால் வாக்குப்பதியும் உரிமையை இழந்த வங்கி ஊழியர் விஜய் சர்க்கார் திரைப்படப் பாணியில் 49P என்ற ஆய்வுக்குரிய வாக்கைப் பதிவு செய்தார்.

சர்கார் திரைப்படத்தில் கள்ள ஓட்டால் வாக்குப்பதிவை இழக்கும் நடிகர் விஜய், மாற்றாக 49P என்ற அடிப்படையில் வாக்குப்பதிவு செய்யும் நடைமுறை குறித்தும் விரிவாக விளக்கப்பட்டிருக்கும். இதனால், கள்ள ஓட்டு மூலம் வாக்குரிமையை இழந்த நபர் இந்த 49P என்ற முறையில் வாக்களிக்க முடியும் என்ற விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் பரவலாக ஏற்பட்டது.

நடிகர் விஜய்யின் சர்கார் பட பாணியில் வேலூரில் வங்கி அதிகாரி லோகேஷ் நிவாஸன் என்பவர் இன்று (ஏப்-6) 49P என்ற முறையில் தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பான விவரம் வருமாறு:

வேலூர் சத்துவாச்சாரி அன்னை தெரசா நகர் இரண்டாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் லோகேஷ் நிவாஸன். பொதுத்துறை வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார். வேலூர் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்ய லோகேஷ் நிவாஸன் இன்று பிற்பகல் சென்றார். ஆனால், அவரது வாக்கை ஏற்கெனவே யாரோ ஒரு நபர் கள்ளத்தனமாக பதிவு செய்துவிட்டது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த லோகேஷ் நிவாஸன் தனக்கு வாக்குரிமை கண்டிப்பாக அளிக்க வேண்டும் என்று அங்கிருந்த வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார்.

இது தொடர்பாக அந்த வாக்குச்சாவடியில் இருந்த அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மத்தியில் வாக்குவாதமும் சலசலப்பும் ஏற்பட்டது. இதையடுத்து லோகோஷ் நிவாஸனுக்கு 49P என்ற அடிப்படையில் வாக்கு அளிக்க வாக்குச்சாவடி தலைமை அலுவலர் சுப்புரத்தினம் அனுமதி வழங்கினார். அதன்படி, ஆய்வுக்குரிய வாக்குச்சீட்டு (49P) என்ற அடிப்படையில் வாக்குச்சீட்டு மூலம் தனது வாக்குரிமையை லோகேஷ் நிவாஸன் பதிவு செய்தார்.

49P வாக்கு கணக்கெடுப்பு:

49P முறையில் பதிவு செய்யப்பட்ட வாக்கின் பயன் மற்றும் அதை எவ்வாறு கணக்கில் கொள்வார்கள் என்பது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ‘‘49P வாக்குச்சீட்டு இருக்கும் உறைதனியாக வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாக்கப்படும். வாக்கு எண்ணும் நாளில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவுகள் எண்ணப்படும். இதில், அதிக வாக்குகள் பெறும் முதல் இரண்டு பேருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் சமமாக இருந்தால் மட்டும் இந்த 49P வாக்குச்சீட்டு உறை பிரிக்கப்பட்டு அவர் யாருக்கு வாக்களித்தார் என்பதை பார்த்து அந்த வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படும். அதிக வாக்குகள் பெறும் முதல் இரண்டு வேட்பாளர்களின் இடையிலான வாக்குகள் வித்தியாசம் அதிகமாக இருந்தால் இந்த 49P உறைகடைசிவரை பிரிக்கப்படாது. 49P என்பது வாக்குரிமையை இழந்த நபரை திருப்திபடுத்த மட்டுமே’’ என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT