மதுரை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் சரியாக வழங்கப்படாததால் பல இடங்களில் வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டது.
தேர்தலுக்கு முன்பு வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயர் இடம் பெற்றிருக்கும் பாகம் எண், வரிசை எண் மற்றும் வாக்களிக்க வேண்டிய இடம் ஆகியவற்றை குறிப்பிட்டு பூத் சிலிப் வழங்கப்படுவது வழக்கம். முன்பு அரசியல் கட்சிகள் பூத் சிலிப்புகளை வழங்கி வந்தன.
அப்போது ஓவ்வொரு கட்சியும் பூத் சிலிப்பில் ஒரு பக்கத்தில் தங்கள் கட்சி சின்னத்தை அச்சிட்டு வாக்காளர்களுக்கு வீடு வீடாக விநியோகம் செய்து வந்தன.
பூத் சிலிப் கிடைக்காதவர்களுக்கு கடைசி நேரத்தில் பூத் சிலிப் வழங்குவதற்காகவே வாக்குச்சாவடி அருகே கட்சியினர் வாக்காளர் பட்டியல் மற்றும் பூத் சிலிப்புடன் தயாராக இருப்பர்.
இந்நிலையில், பூத் சிலிப்புடன் வாக்களிக்க பணமும் வழங்குவதாக புகார் வந்ததால், அரசியல் கட்சிகள் சார்பில் பூத் சிலிப் வழங்க தேர்தல் ஆணையம் தடை விதித்தது. தேர்தல் ஆணையம் சார்பில் கிராம நிர்வாக அலுவலக ஊழியர்களை வைத்து ஒவ்வொரு வீடுகளுக்கும் பூத் சிலிப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த சில தேர்தல்களில் கிராம நிர்வாக அலுவலக ஊழியர்களை வைத்து வீடு வீடாக பூத் சிலிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், இன்றைய தேர்தலில் மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படவில்லை. பூத் சிலிப் இல்லாமல் வாக்களிக்க வந்த வாக்காளர்கள் பூத் சிலிப் வாங்கி வருமாறு திரும்ப அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் அந்த வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு முன்பிருந்த கிராம நிர்வாக அலுவலக ஊழியர்களிடம் பூத் சிலிப் வாங்கி வந்து வாக்களித்தனர்.
பல இடங்களில் வாக்குச்சாவடிகளுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவல ஊழியர்கள் பூத் சிலிப்புகளை வழங்கி வந்தனர். சில இடங்களில் கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து பூத் சிலிப் வழங்கப்பட்டன. ஒத்தக்கடை, திருமோகூர் பகுதிகளில் பெரும்பாலான வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படவில்லை.
பூத் சிலிப் இல்லாமல் வாக்களிக்க வந்தவர்களை கிராம நிர்வாக அலுவலகம் போய் பூத் சிலிப் வாங்கி வருமாறு தேர்தல் அலுவலர்கள் அனுப்பி வைத்தனர். இதனால் திருமோகூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் வாக்காளர்கள் குவிந்தனர். அங்கு விநியோகம் செய்யப்படாமல் வைக்கப்பட்டிருந்த பூத் சிலிப்புகளிலிருந்து வாக்காளர்களே தங்கள் சிலிப்புகளை தேடி எடுத்து வாக்களிக்க சென்றனர்.
பூத் சிலிப் பெறவதற்காக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வாக்காளர்கள் சென்றதால், திருமோகூர் வாக்குச்சாவடி பகல் நேரத்தில் வாக்காளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
இது குறித்து வாக்காளர் செந்தில்குமார் கூறுகையில், ‘பூத் சிலிப் வீடுகளுக்கே வந்து வழங்க வேண்டும். அதற்கு பதில் ஊரில் ஏதாவது ஒரு இடத்தில் இருந்து கொண்டு மக்களை அங்கு வந்து வாங்கிச் செல்லுமாறு சொல்கிறார். இந்த தேர்தலில் அதுவும் இல்லை. சிலருக்கு மட்டும் வழங்கி விட்டு பூத் சிலிப்புகளை மொத்தமாக கிராம நிர்வாக அலுவலகத்திலேயே வைத்துக் கொண்டனர்.
தேர்தல் ஆணையம் நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்து வருகிறது. பூத் சிலிப் இருந்தால் விரைவில் வாக்களிக்க முடியும். பூத் சிலிப் வழங்காமல் நூறு சதவீத வாக்குப்பதிவு சாத்தியமல்ல. பூத் சிலிப் கிடைக்காமல் பலர் வாக்களிக்காமலேயே வீடுகளுக்கு சென்றுவிட்டனர் என்றார்.
கிராம நிர்வாக அலுவலக ஊழியர்கள் கூறுகையில், ‘ இரண்டு நாட்களுக்கு முன்பு தான் பூத் சிலிப்புகள் வந்து சேர்ந்தது. இதனால் முடிந்தளவு வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது’ என்றனர்.