தமிழகத்தில் நேர்மையான அரசாங்கம் அமைய வேண்டும் என, இளம் வாக்காளர்கள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட இளம் வாக்காளர்கள் 49 ஆயிரத்து 879 பேர் உள்ளனர். இவர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் வாக்களித்துள்ளனர்.
கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கிளியாப்பட்டு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் கல்லூரி மாணவிகள் பிரியா, பவித்ரா, சவுமியா, ரேணுகா மற்றும் விஜயலட்சுமி ஆகிய 5 பேர், தங்களது முதல் வாக்கை இன்று பதிவு செய்துள்ளனர்.
பின்னர் அவர்கள் கூறும்போது, "மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. அனைவருக்கும் சம உரிமை என்ற கொள்கையைக் கொண்டது. இந்த நிலையில், நமது நாட்டின் முக்கிய மாநிலங்களில் ஒன்றான தமிழக சட்டப்பேரவையைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்றுள்ளது. புதிய சட்டப்பேரவையைத் தேர்வு செய்வதற்காக, எங்களது வாக்கைப் பதிவு செய்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. எங்களை ஆள்பவர்களைத் தேர்வு செய்யும் உரிமையைப் பெற்றுள்ளோம்.
தமிழகத்தில் அமையப்போகும் புதிய அரசாங்கம், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவர் கல்வி கற்றால், அந்தக் குடும்பமே முன்னேற்றம் அடையும். எனவே, உலகத் தரத்துக்கு இணையான கல்வியை அமைத்துக் கொடுக்க வேண்டும். வேலையற்ற இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் இல்லை என்ற நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
மேலும், விளையாட்டுத் துறையில் கூடுதல் கவனம் செலுத்தி, கிராமப்புறங்களில் இருந்து தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிக்கு வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும். தமிழகத்தில் நேர்மையான அரசாங்கம் அமைந்து, எங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்" என்றனர்.