சின்னாளபட்டியில் உள்ள வாக்குச்சாவடி முன்பு, திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவதாகக் கூறி, ஆத்தூர் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா மறியலில் ஈடுபட்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று (ஏப்.06) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் 3,998 வேட்பாளர்களும், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் 12 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தேர்தல் பாதுகாப்புப் பணியில், 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் உள்பட 1 லட்சத்து 58 ஆயிரத்து 263 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காலை வாக்குப்பதிவு தொடங்கியது முதலே, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சின்னாளபட்டி சிறுமலர் பள்ளி வாக்குச்சாவடி முன்பு திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவதாகத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற பறக்கும் படையினர், மூன்று பெண்களைப் பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து, தகவலறிந்து அங்கு வந்த பாமக வேட்பாளர் திலகபாமா உள்ளிட்ட கட்சியினர், வாக்குப்பதிவை நிறுத்தக் கோரி வாக்குச்சாவடி முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து, காவல் நிலையத்தில் புகார் அளிக்கக் கேட்டுக்கொண்டனர். போலீஸாரின் பேச்சுவார்த்தையை அடுத்து, பாமக வேட்பாளர் திலகபாமா, சின்னாளபட்டி காவல் நிலையத்திற்குச் சென்று வாக்குச்சாவடிக்கு வெளியே பணம் வழங்கிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தார்.