தம்பிதுரை எம்.பி. | கோப்புப் படம். 
தமிழகம்

மக்களின் மனக் கணிப்புகள்படி  நாங்கள் வெல்வோம்: அதிமுக எம்.பி. தம்பிதுரை நம்பிக்கை

செய்திப்பிரிவு

மக்களின் மனக் கணிப்புகள்படி நாங்கள் வெல்வோம் என அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை எம்.பி. தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டம் சிந்தகம்பள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை முன்னாள் துணை சபாநாயகருமான தம்பிதுரை எம்.பி., தனது வாக்கைப் பதிவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கட்சியை முன்னின்று தேர்தலை நடத்தினார். நான் அந்தத் தேர்தலில் ஜெயலலிதாவுடன் பல்வேறு தொகுதிகளுக்குச் சென்றேன்.

1998-ம் ஆண்டு முதல் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து வருகிறேன். இப்போது எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியை முன்னின்று நடத்தி வருகிறார்கள். கடந்த 4 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி நல்லாட்சி தந்துள்ளார். அதற்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது.

கட்சியில் தொண்டனாக இருந்து, இன்று முதல்வராக எடப்பாடி பழனிசாமி உயர்ந்து பணியாற்றி வருகிறார். பல நல்ல திட்டங்களை அவர் செயல்படுத்தியுள்ளார். குடிமராமத்துப் பணிகளை நிறைவேற்றியுள்ளார். டெல்டா பாதுகாக்கப்பட்ட மாவட்டமாக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார். இந்தத் தேர்தலில் தமிழகம் முழுவதும் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. மக்கள் எழுச்சியாக உள்ளார்கள். மக்களின் மனக் கணிப்புகள்படி நாங்கள் வெல்வோம்.

200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வென்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவார். திமுக குடும்பக் கட்சி, வாரிசு அரசியல் நடத்துகிறது. 2ஜி, 3ஜி என அனைத்திலும் ஊழல் செய்துள்ளது. இந்தத் தேர்தலுடன் திமுக அரசியலில் இருந்து காணாமல் போகும். அதிமுகதான் உண்மையான திராவிட இயக்கம். சமூக நீதிக்காக தமிழர்களுக்காக, தமிழ் மொழிக்காகப் போராடும் இயக்கம்''.

இவ்வாறு தம்பிதுரை கூறினார்.

இந்நிகழ்வில் பர்கூர் எம்எல்ஏ சி.வி.ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சியினர் பலர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT