தமிழ்நாட்டுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பை முதல்வர் பழனிசாமிக்கு தருகின்ற தேர்தல் இந்த தேர்தல் என, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும் வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், குன்னத்தூரில் தமது குடும்பத்தாருடன் சென்று வாக்களித்தார்.
அதன்பின், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அமைதி, வளம், வளர்ச்சி, எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்பதே ஜெயலலிதாவின் தாரக மந்திரம். எனக்குப் பின்னாலும் நூறாண்டுகள் தமிழகத்தில் அதிமுக அரசு சேவை செய்யும் என்பதே ஜெயலலிதாவின் வாக்கு.
அதற்கான பொன்னான வாய்ப்பை தமிழக மக்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதிமுக அரசு தமிழக மக்களுக்கு சேவை செய்திருக்கிறது. இன்றைக்கு சட்டம் - ஒழுங்கு காப்பாற்றப்பட்டு, தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது. சாதி சண்டை, மதச்சண்டை, இன சண்டை, ஊர் சண்டை, வம்பு சண்டை என எந்த சண்டையும் இல்லாமல், ஊர்க்காவலனாக இருந்து மக்களுடைய பாதுகாவலராக முதல்வர் பழனிசாமி இருக்கிறார்.
தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு வளர்ச்சியை நோக்கி தமிழ்நாட்டை முதல்வர் பல்வேறு தடைகளைத் தாண்டி எடுத்துச் சென்றார். விவசாயத்தில் முதலிடத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். நீர் மேலாண்மையில் முதலிடத்தில் இருக்கிறது. நிர்வாகத் திறமையில் முதலிடத்தில் இருக்கிறோம்.
எனவேதான், முதல்வராக பழனிசாமி வரவேண்டும் என்று தமிழக மக்கள் எல்லோரும் விரும்புகிறார்கள். அந்த எண்ணத்துக்கு உயிர் கொடுக்கும் வகையில், சரித்திரத்திலே ஒரு சாமானியனை தமிழ்நாட்டுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பை பழனிசாமிக்கு தருகின்ற தேர்தல் இந்த தேர்தல்" என தெரிவித்தார்.