தமிழகம்

கோவில்பட்டி அருகே வாக்களிக்க மறுத்து பொதுமக்கள் தர்ணா

எஸ்.கோமதி விநாயகம்

கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வாக்களிக்க மறுத்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல், அய்யநேரி, அப்பநேரி, பிச்சைதலைவன்பட்டி, சித்திரம்பட்டி, புளியங்குளம், இளையரசனேந்தல், பிள்ளையார்நத்தம், வடக்குப்பட்டி, ஜமீன் தேவர்குளம், நக்கலமுத்தன்பட்டி, லட்சுமியம்மாள்புரம், முக்கூட்டுமலை ஆகிய 12 ஊராட்சிகள் உள்ளன. இங்கு மொத்தம் சுமார் 19 ஆயிரம் வாக்குகள் உள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த இளையரசனேந்தல் பிர்கா கடந்த 2008-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. அப்போது சங்கரன்கோவில் வட்டத்தில் இருந்து கோவில்பட்டி வட்டத்துக்கு அனைத்துத் துறைகளும் மாற்றப்பட்டு விட்டன. உள்ளாட்சித்துறை மட்டும் மாற்றப்படவில்லை. இதனால், இளையரசனேந்தல் பிர்காவைச் சேர்ந்த 12 ஊராட்சிகளும் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திலேயே உள்ளன.

இளையரசனேந்தல் பிர்காவைச் சேர்ந்த 12 ஊராட்சிகள் கோவில்பட்டியைச் சுற்றி 12 கி.மீ. தொலைவிலேயே அமைந்துள்ளன. இந்த ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள் குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும் என்றால், 42 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டும். இதனால் இளையரசனேந்தல் பிர்காவைக் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வலியுறுத்தி அரசியல் கட்சியினர், தேசிய விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால், இணைக்கப்படாததால் சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை முதல் குறைந்த அளவிலான வாக்காளர்களே வாக்குப் பதிவு செய்து வருகின்றனர்.

இளையரசனேந்தல் பிர்காவுக்கு உட்பட்ட அப்பநேரியில் உள்ள 177 ஏ எண் வாக்குச்சாவடியில் 12 மணி நிலவரப்படி 3 வாக்குகளும், 177 எண் மையத்தில் 13 வாக்குகளும், 178 எண் வாக்குச்சாவடியில் 20 வாக்குகளும் பதிவாகியிருந்தன.

மேலும், வாக்குச்சாவடி மையத்தில் இருந்து 100 மீட்டருக்கு அப்பால், பொது மக்கள் சாலையில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஏடிஎஸ்பி கார்த்திகேயன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அமுதா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் அங்கு திரண்டிருந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தேர்தல் புறக்கணிப்பு என்பதில் மக்கள் உறுதியாக இருந்ததால், 'வாக்களிக்க விரும்புபவர்களைத் தடுக்கக்கூடாது, அனைவரும் அமைதியாகக் கலைந்து செல்ல வேண்டும்' என அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT