தமிழக வனத்துறை அமைச்சரும் திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளருமான சீனிவாசன் திண்டுக்கல்  MVM அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.  
தமிழகம்

தமிழகத்திலேயே அதிகம்: திண்டுக்கல் மாவட்டத்தில் காலை 9 மணிக்கு 20.30% வாக்குப் பதிவு

பி.டி.ரவிச்சந்திரன்

தமிழகத்திலேயே அதிகபட்சமாகத் திண்டுக்கல் மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி, 20.30% வாக்குகள் பதிவு செய்யப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், வேடசந்தூர் ஆகிய ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 7 தொகுதிகளிலும் 132 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 2673 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 5,516 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,211 கட்டுப்பாட்டு கருவிகள், 3611 வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவிகள் ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

காலை 7 மணிக்குத் தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி 20.30 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்த நிலையில், தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஹாட்ரிக் வெற்றி பெறும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். தனது குடும்பத்தாருடன் தனது வாக்கைப் பதிவு செய்து இவ்வாறு அவர் பேட்டியளித்துள்ளார்.

திமுக மாநில துணைப்பொதுச் செயலாளரும், ஆத்தூர் சட்டப்பேரவை திமுக வேட்பாளருமான ஐ.பெரியசாமி திண்டுக்கல் வாசவி பள்ளியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

காலை 9 மணிக்கு திண்டுக்கல் தொகுதியில் 7.6 சதவீதம், பழநி தொகுதியில் 10.5 சதவீதம், ஒட்டன்சத்திரம் தொகுதியில் 8.8 சதவீதம், ஆத்தூர் தொகுதியில் 9.33 சதவீதம், நிலக்கோட்டை தொகுதியில் 8.3 சதவீதம், நத்தம் தொகுதியில் 8.1 சதவீதம், வேடசந்தூர் தொகுதியில் 6.9 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் அரா.சக்கரபாணி தனது குடும்பத்துடன் வந்து கள்ளிமந்தையம் சிஎஸ்ஐ பள்ளியில் தனது வாக்கைச் செலுத்தினார்
SCROLL FOR NEXT