புதுச்சேரியில் இரவில் வீடு வீடாகப் பல பகுதிகளில் பரிசுக் கூப்பன் விநியோகிக்கப்பட்டது.
புதுவை சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஏப். 06) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவுக்கு முன்பாக 15 நாட்கள் தீவிரப் பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் இறங்கினர். பிரச்சாரம் ஓய்ந்த நாள் முதல் பல்வேறு தொகுதிகளில் வாக்காளர்களைக் கவர பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தினர்.
நேற்றைய தினம் (ஏப். 05) பண விநியோகம் பல பகுதிகளில் மும்முரமாக நடந்தது. பண விநியோகம் முடிந்த பிறகு டோக்கன் விநியோகம் இரவில் நடந்தது.
அரசியல் கட்சியினர் பலரும் கூறுகையில், "வேட்பாளர்கள் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க டோக்கன் அரசியலைத் தொடங்கினர். ஒருவர் டோக்கன் கொடுத்தவுடன் மற்ற கட்சியைச் சேர்ந்தவர்களும் போட்டி போட்டுக் கொண்டு டோக்கன் வழங்கத் தொடங்கினர். நள்ளிரவில் வீடுகளின் வாசல்களில் டோக்கனை வீசிவிட்டுச் சென்றனர்" என்று தெரிவித்தனர்.
வீட்டு வாசலில் டோக்கன்கள் கிடந்ததாகப் பல வாக்காளர்கள் தெரிவித்தனர். ஒருசில இடங்களில் டோக்கன் வழங்கியவர்கள் வெற்றி பெற்றால், அடுப்பு, குக்கர், வாட்டர் பியூரிஃபயர் எனப் பரிசுப் பொருட்கள் தருவதாகக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
வெற்றி பெற்றால்தான் இந்தப் பொருட்கள் கிடைக்கும். எனவே, ஏமாற்றாமல் வெற்றி பெறுபவர்களுக்கு வாய்ப்பு தாருங்கள் என, முன்னணியில் இருந்த வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் இறுதிப் பிரச்சாரத்தில் இன்று வீடு வீடாகவும், தங்கள் தொகுதிகளில் வாக்குச்சாவடி அருகேயும் வெளிப்படையாக ஈடுபட்டனர்.
கட்சியினர், வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் கும்பலாகப் பல பகுதிகளில் நின்றாலும் தேர்தல் துறையினர் அமைதி காத்தனர். பதற்றமான வாக்குச்சாவடி அருகே மத்திய படையினர் வாக்குச்சாவடி அருகே பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.