நாமக்கல் நகர் பகுதியில் உள்ள கோட்டை சாலையில் வாக்காளர்களுக்குத் தங்கக் காசு அளிப்பதற்கான டோக்கன் விநியோகம் செய்ய திமுக முயன்றதாகப் புகார் எழுந்துள்ளது.
நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு இன்று (ஏப். 06) காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாமக்கல் கோட்டை சாலையில் வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்குத் தங்கக் காசு வழங்குவதற்கான டோக்கன் வழங்குவதற்காக திமுகவினர் முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் திமுகவினரைப் போல் அதிமுகவினர் தங்கக் காசு வழங்குவதற்கான டோக்கன்களை அச்சடித்து அவற்றை வாக்காளர்களுக்கு வழங்காமல் சாலைகள் மற்றும் தெருக்களில் கிழித்து எறிந்து வீசிச் சென்றனர்.
இதனைப் பார்த்துக் கொண்டிருந்த திமுகவினர், டோக்கன்களைக் கிழித்து எறிந்து வீசியதைத் தடுத்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தங்கக் காசு வழங்குவதற்கான டோக்கன்களைக் கிழித்து சாலையில் எறிந்ததால் வாக்களிக்க வந்த வாக்காளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டதால், இதுகுறித்துத் தகவலறிந்த நாமக்கல் காவல் ஆய்வாளர் குமார் தலைமையில் போலீஸார், அங்கு வந்து இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனைவரையும் அப்புறப்படுத்தினார்.
நாமக்கல் கோட்டை சாலையில் வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்குத் தங்கக் காசு வழங்குவதற்கான டோக்கன் வழங்க முற்பட்ட புகாரில், இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டதால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. தொடர்ந்து அங்கு போலீஸார் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.