திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வரிசையில் நின்று வாக்களித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “வாக்குப்பதிவுக்காக வரிசையில் நிற்கும் மக்களின் முகங்களைப் பார்த்தேன். ஏழை, எளிய மக்கள், தினக்கூலி மக்கள் அதிகமாக வந்துள்ளனர். அவர்கள் முகத்தில் புன்சிரிப்பை கண்டேன். அவர்கள் என்னை வரவேற்பதைக் கண்டேன்.
திமுகவுக்கு மக்களிடம் பேராதரவு திரண்டிருப்பதைக் காண முடிந்தது. இந்தத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும்.
கலிங்கப்பட்டியில் வாக்களித்த வைகோ, அவரது மகன் துரை வையாபுரி
சங்கரன்கோவில் தொகுதியில் திமுக வேட்பாளர் ராஜா மிகப்பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. ஜனநாயகத்தின் தீர்ப்பு ஸ்டாலின் முதல்வர் என்ற தீர்ப்பாக அமையும்.
தமிழகத்தில் 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யக் கோரி அதிமுகவினர் அளித்த மனு குப்பைத்தொட்டிக்கு சென்றிருக்கும். தேர்தலில் அதிமுகவினர் படுதோல்வி அடைவார்கள்” என்றார்.