வாக்களிப்பது பெருமை என்றும், நமது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி என்றும் முதன்முறையாக கேத்தியில் வாக்களித்த இளம்பெண்கள் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல வாக்குச்சாவடிகளில் மக்கள் காலையிலேயே தங்கள் வாக்குகளைச் செலுத்த வந்திருந்தனர். உதகை பாஜக வேட்பாளர் மு.போஜராஜன் தனது சொந்த ஊரான கோத்தகிரி காந்தி மைதானத்தில் உள்ள புயல் நிவாரண முகாம் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கணேஷ் மஞ்சக்கொம்பை வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
உதகை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கேத்தி சிஎஸ்ஐ பள்ளி வாக்குச்சாவடியில் மக்கள் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். முன்னாள் எம்.பி. கே.ஆர்.அர்ஜூணன் இந்த வாக்குச்சாவடியில் அருகேயுள்ள தொரைஜாடா கிராமத்தைச் சேர்ந்த முதன்முறை வாக்காளர்களான சகோதரிகள் சினேகா கலா, மோனிகா கலா ஆகிய இருவரும் வாக்களித்தனர்.
சினேகா கலா முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு பயின்று வருகிறார். மோனிகா கலா இறுதியாண்டு படிக்கிறார். வாக்களித்தது குறித்து அவர்கள் கூறும் போது, 'வாக்களிப்பது பெருமையாக உள்ளது. நமது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி' என்று தெரிவித்தனர்.
வாக்களிக்க வந்த முதியோர்களுக்குத் தேர்தல் அலுவலர்கள் கையுறைகள் வழங்கி உதவி செய்தனர். நீலகிரி மாவட்டத்தில் 10 மணி வரை சுமார் 10 சதவீதம் வாக்குகள் பதிவாகின.