விழுப்புரம் மாவட்டத்தில் காலை 7 மணிக்கே வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் குவிந்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று (ஏப்.06) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் 3,998 வேட்பாளர்களும், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் 12 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தேர்தல் பாதுகாப்புப் பணியில், 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் உள்பட 1 லட்சத்து 58 ஆயிரத்து 263 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காலை வாக்குப்பதிவு தொடங்கியது முதலே, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2,368 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 11 ஆயிரத்து 368 பேர் தேர்தல் பணியிலும், கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 4,676 சுகாதாரப் பணியாளர்கள் முகக்கவசம், கையுறையோடு சானிடைசர் கொடுக்கப்பட்டு, வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறாகள்.
மாவட்டம் முழுவதும் அஞ்சல் வாக்காளர்கள் உட்பட 16 லட்சத்து 85 ஆயிரத்து 810 வாக்காளர்கள் உள்ளனர். இன்று மாவட்டம் முழுவதும் காலை 7 மணிக்கே வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் குவிந்தனர்.
திண்டிவனத்தில் உள்ள தனியார் பள்ளி வாக்குச்சாவடியில் வரவேற்பு வளையம் அமைக்கப்பட்டு, வாழை மரம் கட்டப்பட்டு, தனிமனித இடைவெளியோடு வாக்காளர்கள் அமர இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.