நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் தொடங்கியதுமே வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகின.
தமிழகம் முழுவதும் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று (ஏப். 06) காலை தொடங்கியது. நீலகிரி மாவட்டத்தில் மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. மொத்தம் 868 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில், 112 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.
மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 5 லட்சத்து 86 ஆயிரத்து 950 வாக்காளர்கள் உள்ளனர். 3,845 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதில், உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிகபட்சமாக இடுஹட்டி ஊராட்சியில் 1,048 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக குந்தா லோயர் கேம்ப் ஊராட்சியில் 103 வாக்காளர்கள் உள்ளனர்.
கூடலூர் தனித்தொகுதியில் அதிகபட்சமாக சுங்கம் பஞ்சாயத்தில் அதிகபட்சமாக 1,054 வாக்காளர்களும் குறைந்தபட்சமாக சிங்காரா கேம்ப் ஊராட்சி பள்ளியில் 126 வாக்காளர்களும் உள்ளனர்.
குன்னூர் தொகுதியில் அதிகபட்சமாக கன்னேரிமுக்கு-வில் 1,051 வாக்காளர்களும் குறைந்தபட்சமாக பில்லூர் மட்டத்தில் 172 வாக்காளர்களும் உள்ளனர்.
இந்த மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 5 லட்சத்து 86 ஆயிரத்து 950 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் காலை முதலே வாக்காளர்கள் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 10 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகின. அவற்றை தேர்தல் அலுவலர்கள் மாற்றினர்.
உதகை புனித சூசையப்பர் பள்ளி வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வாக்களித்தார்.
அதே பள்ளியில் மகளிருக்கு பிரத்யேகமான வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. இதில், தேர்தல் பணியாளர்கள் முழு கவச உடையுடன் பாதுகாப்பாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.