தமிழகம்

பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு: களத்தில் 3,998 வேட்பாளர்கள்; ஆர்வத்துடன் பங்கேற்கும் வாக்காளர்கள்

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் உள்பட 1 லட்சத்து 58 ஆயிரத்து 263 வீரர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் களத்தில் 3,998 வேட்பாளர்களும் கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் 12 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

88,937 வாக்குச் சாவடிகள்

தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் 537 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள், 10,183 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்குச்சாவடி அலுவலர் களாக 4 லட்சத்து 17,521 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 8,014 நுண் பார்வையாளர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 59,165 வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் தலா 91,180 எண்ணிக்கையில் தயாராக உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச் சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

கரோனா நெறிமுறைகள்:

வாக்குச்சாவடிகளில் கரோனா தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 2 சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர்.

இவர்கள் கரோனா தடுப்பு கவச உடைகளை வழங்குவது, அதை திரும்பப் பெற்று முறையாக அழிப்பது, வாக்காளர்கள் இடையே சமூக இடைவெளியைக் கடைபிடிக்கச் செய்வது, முகக்கவசம் இல்லாதோருக்கு முகக்கவசம் வழங்குவது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக நேற்று, தலைமைச் செயலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளை வெப் காஸ்டிக் முறையில் கண்காணிக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், தேர்தல் தொடர்பாக புகார் அளிக்க வழங்கப்பட்டுள்ள 1950 தொலைபேசியில் வரும் அழைப்புகளை கையாளும் பணியாளர்களின் செயல்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேரில் ஆய்வு செய்தார்.

நடிகர்கள் அஜித், ரஜினி வாக்களிப்பு:

நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வழக்கம்போல் அதிகாலையிலேயே வந்து வாக்களித்தார். அஜித் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். அதேபோல், நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் வாக்களித்தார்.

வெற்றி நிச்சயம்: ப.சிதம்பரம் உறுதி

காரைக்குடியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது வாக்கினைப் பதிவு செய்துவிட்டு மதச்சார்பற்ற கூட்டணி நிச்சயமாக மகத்தான வெற்றி பெறும் என்றார்.

SCROLL FOR NEXT