தமிழகம்

அடுத்து அமையும் ஆட்சியிலாவது தீர்க்கப்படுமா?- பல ஆண்டுகளாக தொடரும் ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சினை: பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

கல்யாணசுந்தரம்

ஸ்ரீரங்கத்தில் பல ஆண்டுகளாக தொடரும் அடிமனை பிரச்சினை, அடுத்து அமையும் ஆட்சியிலாவது தீர்க்கப்படுமா என ஸ்ரீரங்கம் மக்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பூலோக வைகுண்டம் என்றும், 108 வைணவ திவ்ய தேசத் தலங்களில் முதன்மையான தலம் என்றும் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இக்கோயில் அமைந்துள்ள வெள்ளித்திருமுத்தம் கிராமத்தில் அடங்கிய ஏறத்தாழ 800 ஏக்கர் நிலப்பரப்பு கோயிலுக்குச் சொந்தமானது என்பதால், இங்கு குடியிருந்து வரும் மக்கள் தங்களது சொத்தை விற்கவோ, அடமானம் வைக்கவோ முடியாத நிலையில் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து அரங்கமா நகர் நலச் சங்கத்தின் அடிமனை உரிமை மீட்புக் குழுத் தலைவர் பி.ஹேமநாதன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது: 1867-ம் ஆண்டின் இனாம் சார் பதிவேட்டில் இந்த பகுதி நத்தம் என்றும், ரங்கநாதர் கோயிலின் 4 பிரகாரங்கள் கோயில் புறம்போக்கு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1963-ம் ஆண்டு இனாம் ஒழிப்புச் சட்டத்தின் அடிப்படையில் இந்த நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க அரசு உத்தரவிட்டது. இதற்காக அப்போதுமுதல் வருவாய்த் துறை மூலம் ஆண்டுதோறும் கோயில் நிர்வாகத்துக்கு இன்றளவும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

1930-ம் ஆண்டு ‘அ’ பதிவேட்டின்படி வெள்ளித்திருமுத்தம் கிராமத்தில் உள்ள 329 ஏக்கர்நிலம் கோயிலுக்குச் சொந்தம்என உள்ளது. ஆனால் வெள்ளித்திருமுத்தம் கிராமத்தில் உள்ள ஏறத்தாழ 800 ஏக்கர் நிலப்பரப்பும் தங்களுக்குச் சொந்தம் என கோயில் நிர்வாகம் கூறியதால், 2007 முதல் இந்த பகுதியில் உள்ள மனைகளை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வதை நிறுத்திவிட்டனர்.

இதன் காரணமாக இங்குள்ளமனைகள், வீடுகள் உள்ளிட்டவற்றை விற்கவோ, வாங்கவோ, அடமானக் கடன் பெறவோ முடியாத நிலை உள்ளது. தொடர்ந்துபல்வேறுகட்ட போராட்டங்கள் நடத்தியும், எந்தப் பலனும் கிடைக்கவில்லை. நீதிமன்றத்தில் உள்ள வழக்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்றார்.

ஜெயலலிதாவும் தீர்க்கவில்லை

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா, ஸ்ரீரங்கம்அடிமனை பிரச்சினை தீர்க்கப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால், அவர் 6 ஆண்டுகள் முதல்வராக இருந்தபோதும், அவரது மறைவுக்குப் பிறகு தொடர்ந்து 4 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் இந்த பிரச்சினை தீர்க்கப்படவில்லை.

கடந்த மார்ச் 26-ம் தேதி ஸ்ரீரங்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், மார்ச் 30-ம் தேதி திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சினை குறித்து எதுவும் பேசவில்லை.

வேட்பாளர்கள் வாக்குறுதி

அதே சமயம், இந்த பிரச்சினைக்கு சட்டரீதியான தீர்வு காணப்படும் என திமுக வேட்பாளர் எம்.பழனியாண்டி, அதிமுகவேட்பாளர் கு.ப.கிருஷ்ணன், அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். ஆனாலும், ரங்கம் அடிமனை பிரச்சினையை அடுத்து அமையும் அரசாவது தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளனர்.

SCROLL FOR NEXT