தமிழகம்

துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.விஜயபாஸ்கர், செந்தில்பாலாஜி மீது வழக்கு- பணப்பட்டுவாடா, தேர்தல் விதிமீறல் புகார்கள் மீது நடவடிக்கை

செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த குப்பத்தா மோட்டூரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பறக்கும் படை அதிகாரிகள் அங்குசென்று அதே பகுதியைச் சேர்ந்த கோபி (34) என்பவரை பிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.56 ஆயிரம் பணத்துடன் திமுக வேட்பாளருக்கு ஆதரவான தேர்தல் துண்டுப் பிரசுரங்களையும் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக திருவலம் போலீஸார் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியது, அரசு அதிகாரிகளைப் பார்த்து ஆபாசமாக பேசியதுஅரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து கோபியை கைது செய்தனர். இந்த வழக்கில் 2-வது குற்றவாளியாக திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கே.என்.நேரு மீது 4 பிரிவு

திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அண்மையில் முசிறி திமுக கட்சி அலுவலகத்தில் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. அதில், ஆபாசமாகவும், தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கும் பணம் விநியோகிப்பது உள்ளிட்டவை தொடர்பாகவும் பேசியிருப்பதாக முசிறி காவல் நிலையத்தில் முசிறி தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் பத்மநாபன் புகார் அளித்தார்.

அதன்பேரில் இந்திய தண்டனைசட்டம் 294-பி (ஆபாசமாக பேசுதல்), 171-இ (லஞ்சம்), 171-எச் (வாக்காளர்களுக்கு பணம் வழங்குதல்), 506(1) (மிரட்டல்) உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் கே.என்.நேரு மீது காவல் ஆய்வாளர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

கரூரில் விதிமீறல்

கரூரில் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே நேற்று முன்தினம் திமுக சார்பில் நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் திமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ, கட்சியினர் ஏராளமானோருடன் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, திமுகவினர் பட்டாசு வெடித்தனர்.

இதேபோல, கரூர் கோவை சாலையில் 80 அடி சாலை பிரிவு அருகே நேற்று முன்தினம் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சரும், கரூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்தார். அப்போது, அதிமுகவினர் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

இதுகுறித்து கரூர் தொகுதி பறக்கும் படை அலுவலர் முத்துகுமார் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸார், தேர்தல் விதிகளை மீறி 2,500 பேரை திரட்டி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டதாகவும், பட்டாசுகள் வெடித்ததாகவும் செந்தில்பாலாஜி மீது நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது தேர்தல் விதிகளை மீறி 3,000 பேரைத் திரட்டி பிரச்சாரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தஞ்சாவூரில் கைது

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதிக்கு உட்பட்ட திருக்காணூர்பட்டி ஊராட்சி தேவாரம் நகர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, திருக்காணூர்பட்டியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் திவ்யநாதன் என்பவரிடம் இருந்து ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், திவ்யநாதனை வல்லம் போலீஸில் ஒப்படைத்தனர். அவரை வல்லம் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாமகவினர் மீது வழக்கு

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் போலீஸார் நேற்றுமுன்தினம் இரவு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாமக பிரமுகர்களான விளந்தை சுப்பிரமணியர் கோயில் தெரு கோபிநாத், தோப்புத்தெரு முருகேசன்,எம்.ஜி.ஆர் நகர் தர்மலிங்கம் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்துக் கொண்டிருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து 3பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அவர்களிடமிருந்து ரூ.56,380-ஐ பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT