சென்னை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில், வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதிகளில் 1,061 இடங்களில் 5,911 வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் 28,372 மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் 14,276 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 7,095 கட்டுப்பாட்டு கருவிகள், 7,984 விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி மூலம் வாக்காளர்களை பரிசோதிக்கவும், வாக்காளர்கள் கைகளை முறையாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வதை உறுதி செய்யவும் ஒரு வாக்குச்சாவடிக்கு 2 சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு வலது கையில் அணிந்து கொள்ள பாலித்தீன் கையுறைகள் வழங்கப்பட உள்ளன. வாக்குச்சாவடியில் பணியில் உள்ள அலுவலர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய தனியே கிருமிநாசினி திரவம், முகக்கவசங்கள், ரப்பர் கையுறை வழங்கப்படும்.
வாக்காளர்களின் உடல் வெப்பநிலை சராசரிக்கு மிக அதிகமாக இருந்தாலும், கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு இருந்தாலும், தனிமைப்படுத்தப்பட்டு இருந்தாலும், அவர்களுக்கு மாலை 6 முதல் 7 மணி வரையில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படு வார்கள்.
வாக்குச் சாவடிகளில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ 1,061 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 30 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை, 577 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 74 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.