தமிழகம்

பள்ளிக்கரணை லாரி ஓட்டுநர் கொலை வழக்கில் தாய், சகோதரி கைது

செய்திப்பிரிவு

சென்னையை அடுத்த வேளச்சேரி அருகே உள்ள பள்ளிக்கரணையில் கடந்த செவ்வாயன்று லாரி ஓட்டுநர் ஒருவர் மர்மமான முறையில் இறந்ததாக புகார் எழுந்தது.

பள்ளிக்கரணை, ராஜலஷ்மி நகர் 7-வது தெருவில் வசித்து வந்த எஸ்.சதாம் ஹுசைன் (25) என்ற நபர் மர்மமான முறையில் தனது வீட்டில் இறந்து கிடந்தார்.

இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவரது இறப்பு தொடர்பாக புகார் அளித்த இவரது தாயாரும் சகோதரியும், அதில், செவ்வாயன்று காலை தனது மகன் வீட்டுக்கு வந்த போது கடுமையாக காயம் ஏற்பட்டிருந்ததாகவும், இதனையடுத்து மரணமடைந்ததாகவும் கூறியிருந்தனர்.

ஆனால், சதாம் ஹுசைன், தனது சகோதரி இஸ்மத் சுல்தானாவின் காதல் விவகாரம் குறித்து தகராறு செய்ததாகவும், மகளுக்கு ஆதரவு தரும் தாயாருக்கும் இவருக்கும் இடையே சண்டை இருந்து வந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

சதாமின் சகோதரி இஸ்மத், அதே பகுதியைச் சேர்ந்த ஹயாத் பாஷா என்ற 30 வயது வாலிபரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இவருடனான காதலையே சதாம் எதிர்த்து தாயார் மற்றும் சகோதரியிடம் சண்டையிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த திங்களன்று தாயும் மகளும் சதாமை அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் உடனடியாக கொல்லப்பட்டார் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் பிரேதப் பரிசோதனை அறிக்கை சதாமின் தாயார், சகோதரி கொடுத்த புகாரை ஆதரிக்கும் விதமாக இல்லை. இதனையடுத்து தாயும் மகளும் கைது செய்யப்பட்டு மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர். இருவரையும் புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சதாமின் தாயர் ரெஜினா பேகத்துக்குத் தெரிந்தவரான அப்துல் காதர் என்பவரை போலீஸ் தேடி வருகிறது.

SCROLL FOR NEXT