வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியில் அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட அதிமுக வேட்பாளர் வேலழகனுக்கு ஆதரவாக பணம் விநியோகம் செய்யப்படுவதாக நேற்று முன்தினம் இரவு மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், பள்ளிகொண்டா பகுதியில் இருந்த பறக்கும் படை குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்களைப் பார்த்ததும் பணம் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்த காரில் ஏறி தப்பினர். அந்த கார் வேலூர் நோக்கி வேகமாகச் சென்றது. அந்த காரை விடாமல் விரட்டிய பறக்கும் படை அதிகாரிகள் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில், வேலூரின் பல்வேறு பகுதிகளில் வாகனத் தணிக்கை அதிகரிக்கப்பட்டது. பள்ளிகொண்டாவில் இருந்து வேகமாக வந்த கார், வேலூர் மக்கான் பகுதிக்கு வந்தது. அப்போது, அங்கு தயாராக இருந்த வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலை மையிலான காவலர்கள் அந்த காரை மடக்கினர். மேலும், காரில் இருந்த 3 பேரையும் சுற்றிவளைத்து பிடித்தனர்.
விசாரணையில் வேலூர் சாயிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பாமக முன்னாள் மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் (48), கோபி (24), ஓட்டேரியைச் சேர்ந்த வேலூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் சதீஷ் (24) என்பதும் தெரியவந்தது. காரில் இருந்த ரூ.4 லட்சம் பணம் மற்றும் பாமக துண்டுகள் மற்றும் அதிமுக வேட்பாளருக்கான துண்டுப் பிரசுரங்கள் மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக வேலூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பாமகவை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். மேலும், அதிமுக வேட்பாளர் வேலழகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.