மதுரையில் மருத்துவமனை, வர்த்தகக் கட்டிடங்களில் ஏற்படும் தீவிபத்துக்களைத் தடுக்க, ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என, தென்மண்டல தீயணைப்பு இயக்குநர் விஜயகுமார் கூறினார்.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பில், மருத்துவமனைகள், பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஏற்படும் திடீர் தீவிபத்துக்களை தடுப்பது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மதுரை அழகர்கோயில் சாலையிலுள்ள ஓட்டலில் இன்று நடந்தது.
கூட்டத்துக்கு, தென்மண்டல தீயணைப்பு இயக்குநர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட அலுவலர் வினோத் உள்ளிட்ட தனியார் மருத்துவமனை, ஓட்டல், வர்த்தக நிறுவனங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
இது தொடர்பாக தீயணைப்புத்துறை தென்மண்டல இயக்குநர் விஜயகுமார் செய்தியாளர்களிடம் கூறியது:
மதுரை மாவட்டத்தில் மருத்துவமனைகளில் தீ விபத்து தடுப்பு குறித்து ஒருநாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. சமீபத்தில் மும்பையில் கரோனா மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெரும்பாலும் இதுபோன்ற விபத்துகள் மின்கசிவு காரணத்தாலே நடக்கிறது. உயிர்காக்கும் மருத்துவமனைகளில் நடக்கும் தீ விபத்துக் களை தடுக்கவேண்டும் என்பதை மனதில் வைத்து இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக மருத்துவமனை உள்ளிட்ட பெரிய நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்படும். வர்த்தக நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள், தற்காலிக கரோனா மருத்துவ மையங்களில் பாதுகாப்பு, முன்எச்சரிக்கை நடவடிக்கை, தடுப்பு முறை குறித்து பயிற்சி வழங்கப்படும். எப்போதும் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து, தீ விபத்துக்கள் ஏற்பட நேரிடும் என்பதால் தீயணைப்பு வாகனங்கள், வீரர்கள் தயார் நிலையில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்காக ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வீரர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட மாட்டாது.கோடை காலத்தில் குடிசை வீடுகள் நிறைந்த பகுதிகளை கண்காணிப்போம்.
தற்போது, அது மாதிரியான நிலவரம் குறைவு என்றாலும், குடிசை வீடுகள் நிறைந்த இடங்களை ஆய்வு செய்து கண்காணிக்கப்படும், என்றார்.