போடி தொகுதி மலைகிராம வாக்குச்சாவடியான சென்ட்ரல் பகுதிக்கு பாதை வசதி இல்லாததால் குதிரைகள் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.
தேனி மாவட்டம் போடி தொகுதிக்கு உட்பட்ட மலைகிராமம் குரங்கணி. இங்குள்ள முட்டம், முதுவாக்குடி, டாப்ஸ்டேஷன் வனப்பகுதியில் 260 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கான வாக்குப்பதிவு மையம் சென்ட்ரல் எனும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பகுதி மலைப்பகுதியாக இருப்பதுடன், பாதை வசதியும் இல்லை. எனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அதற்கான துணை இயந்திரங்கள்,
கரோனா பரவல் தடுப்பு மருத்துவ உபகரணங்கள், வாக்குப்பதிவுக்கான பொருட்கள் போன்றவை குரங்கணி வரை ஜீப்பில் கொண்டு செல்லப்பட்டன.
பின்பு அங்கிருந்து 3 குதிரைகள் மூலம் 7 கிமீ.தூரத்தில் உள்ள சென்ட்ரல் வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்லப்பட்டன
வாக்குப்பதிவு மைய மண்டல அதிகாரி சிவகுமார் தலைமையில் 4 அதிகாரிகளும் துப்பாக்கி ஏந்திய நான்கு காவலர்களும் உடன் நடந்து சென்றனர்.
சாலை உள்ளிட்ட வசதிகள் செய்து தராததால் இப்பகுதி மக்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணித்தனர். தற்போது இதற்கான சர்வே பணிகள் நடப்பதால் மலைவாழ் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.