தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் பயன்படுத்துவதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட வாக்குப்பதிவுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் இன்று பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டன.
திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி) ஆகிய 9 தொகுதிகள் உள்ளன. இந்த 9 தொகுதிகளுக்குமான வாக்காளர் பட்டியலில் மொத்தம் 23 லட்சத்து 38 ஆயிரத்து 745 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக மொத்தம் 3,292 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுக்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரம், வாக்களித்ததை உறுதி செய்யும் இயந்திரம் மற்றும் கையுறை, முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட 11 வகையான பொருட்கள் ஆகியவை வாகனங்களில் ஏற்றப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டன.
ஸ்ரீரங்கம் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இந்தப் பணியை மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி தொடக்கிவைத்து ஆய்வு செய்தார். அப்போது, ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் விசு மகாஜன், பயிற்சி ஆட்சியர் சித்ரா விஜயன், துணை ஆட்சியர் (பயிற்சி) பவித்ரா ஆகியோர் உடனிருந்தனர்.
இதேபோல், மணப்பாறை தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் இருந்தும், திருச்சி கிழக்குத் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் இருந்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை அனுப்பிவைக்கப்பட்டன.
திருச்சி மேற்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் தனி ஆகிய தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டன.
வழிபாடு நடத்தி, சூடமேற்றி...
திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலக வளாகத்தில் உள்ள கோயிலில், திருச்சி கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சுப.கமலக்கண்ணன் தலைமையில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றப்பட்டிருந்த வாகனங்களில் முதல் வாகனம் சூடம் காண்பித்து, பூசணிக்காய் சுற்றி உடைத்து அனுப்பிவைக்கப்பட்டது.