நத்தம் தொகுதிக்குட்பட்ட மலையூர் மலை கிராமத்திற்கு போக்குவரத்து வசதி இல்லாததால் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புடன் குதிரையில் கொண்டுசெல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம். 
தமிழகம்

கொடைக்கானல் மலை கிராமத்திற்கு குதிரையில் கொண்டுசெல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம்  

பி.டி.ரவிச்சந்திரன்

கொடைக்கானல் மலைப்பகுதியில் சாலை வசதியில்லாத கிராமத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட வாக்குச் சாவடியில் பயன்படுத்தப்பட உள்ள பொருட்கள் குதிரைகள் மூலம் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தொகுதிக்கு உட்பட்ட கொடைக்கானல் மலைப்பகுதியில் சாலை வசதியில்லாத வெள்ளகவி என்ற மலை கிராமம் உள்ளது. வட்டக்கானல் பகுதியில் இருந்து அடர்ந்த வனப்பகுதிகள் வழியாக ஒற்றையடிப் பாதையில் ஏழு கிலோ மீட்டர் நடந்துசென்று இந்த கிராமத்தை அடையவேண்டும். இதனால் இன்று காலையிலேயே இந்த கிராமத்திற்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

வெள்ளகவி கிராமத்தில் 290 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வட்டக்கானல் பகுதி வரை வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து குதிரைகள் மேல் வைத்துக் கட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அழியாத மை மற்றும் வாக்குப் பதிவின்போது பயன்படுத்தப்படும் பல்வேறு படிவங்கள் கொண்டு செல்லப்பட்டன.

அவற்றுடன் வாக்குச் சாவடியில் பணிபுரிய உள்ள எட்டு அலுவலர்கள், மூன்று துப்பாக்கி ஏந்திய போலீஸார் பலத்த பாதுகாப்புடன் ஏழு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றனர். வாக்குப் பதிவு முடிந்த பின்பும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குதிரை மூலம் கொண்டு வரப்பட உள்ளது.

பழநி தொகுதிக்குட்பட்ட கொடைக்கானல் மலைப்பகுதியில் சாலை வசதியில்லாத வெள்ளகவி கிராமத்திற்கு குதிரையில் கொண்டுசெல்லப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்.

நத்தம்

நத்தம் தொகுதிக்குட்பட்ட மலையூர் மலை கிராமத்தில் 473 வாக்காளர்கள் உள்ளனர். இந்த மலை கிராமத்திற்குப் போக்குவரத்து வசதியில்லை. இங்குள்ள வாக்குச்சாவடிக்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் குதிரையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுசெல்லப்பட்டன. நான்கு அலுவலர்களும், நான்கு போலீஸாரும் உடன் சென்றனர்.

SCROLL FOR NEXT