திருமண வீடுகளை போல் சிறப்பான அலங்காரத்துடன் சிவப்பு கம்பள வரவேற்புடன் வாக்காளர்களை அழைக்கும் மாதிரி வாக்குச்சாவடிகளும், கரோனாவையொட்டி புதுச்சேரியில் வாக்காளர்கள் இடைவெளியுடன் நிற்க அடையாளங்களும் வரையப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் நாளை (ஏப். 06) தேர்தலையொட்டி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் தேவையை பொருட்டு வாகன வசதி தேவை இருப்பின் ஏற்பாடு செய்யப்படும்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வெயிலில் நிற்காமல் இருக்க மேற்கூரை வசதியும் கோடையொட்டி செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் வாக்குச்சாவடியை அடையாளம் காண உதவி மையமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முக்கியமாக கரோனா காலம் என்பதால், போதிய இடைவெளியுடன் நிற்க அடையாளங்களும் வரையப்பட்டுள்ளன.
வாக்காளர்களுக்கு சிறப்பு கம்பள வரவேற்பு நூறு சதவீத வாக்களிப்பை நிறைவேற்றும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மாதிரி வாக்குப்பதிவு மையங்களும் புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் திருவிழா வீடுகள் போல் காட்சியமைக்கும் விதத்தில் வடிவமைத்து வருகின்றனனர். மூலக்குளம் பகுதியில் மாதிரி வாக்குப்பதிவை மையத்தில் மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் பார்வையிட்டார்.
அதிகாரிகள் கூறுகையில், "வாசலில் சுப நிகழ்வு நடக்கும் வீடுபோல் வாழைமரத் தோரணம் கட்டப்படும். வாக்காளர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் விதத்தில் ஏற்பாடு செய்துள்ளோம். உள்ளே வரும் வாக்காளர்களை பன்னீர் தெளித்து வரவேற்போம். வாக்குச்சாவடிகளில் பலூன்களால் அலங்கரித்து வைத்துள்ளனர். சுப நிகழ்வுகள் நடக்கும் இல்லங்களில் இருப்பதுபோல் வாக்காளர்களை கவரும் வகையில் அனைத்துப் பணிகளும் நடந்து வருகிறது" என்று தெரிவித்தனர்.