தமிழகத்தில் 11 மாவட்டங்களில் வெப்பநிலை 5 டிகிரிவரை அதிகரிக்கும் எனவும், கரூர், திருச்சி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்பதால் பகல் 12 மணி முதல் 4 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்ய வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு
ஏப்ரல் 5 முதல் 7 வரை கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை அளவு இயல்பை விட 3 இருந்து 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
திண்டுக்கல், மதுரை, கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஆனால் காற்று வீசக் கூடும் என்பதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் 12 மணிமுதல் பிற்பகல் 4 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஏனைய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை அளவு இயல்பை விட 1 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் வரை உயரக்கூடும்.
வளிமண்டலத்தில் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் சுழற்சியின் காரணமாக ஏப்ரல் 5 அன்று வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
ஏப்ரல் 6 முதல் 8 வரை தமிழகம் மற்றும் புதுவை காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். ஏப்ரல் 9 அன்று தமிழகம் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்ஷியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஷியஸை ஒட்டி இருக்கும்”.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.