தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ஆவணம் இன்றி எடுத்துச் சென்றதாக, திருச்சி மாவட்டத்தில் ரொக்கம், பொருட்கள் மற்றும் மதுபானங்கள் என இதுவரை ரூ.5,67,82,611 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் அறிவிப்பு பிப்.26-ம் தேதி வெளியானது. இதையடுத்து அன்றைய தினமே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதனால் பணம் மற்றும் பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்வதில் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
இதில் விதிமீறல்கள் நடைபெறுவதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் போலீஸார், கலால் துறையினர் ஆகியோரும் 9 தொகுதிகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி, உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்டதாக ரூ.2,80,27,976 ரொக்கம், ரூ.2,62,85,420 மதிப்பில் பல்வேறு பொருட்கள் மற்றும் கலால் துறை மூலம் ரூ.24,69,215 மதிப்பில் மதுபானங்கள் என இதுவரை மொத்தம் ரூ.5,67,82,611 மதிப்பிலான பொருட்கள் (ரூ.5.67 கோடி) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.