தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டதால், நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.160 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகின.
தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இக்கடைகளில் தினமும் சராசரியாக ரூ.90 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்படும். பண்டிகை நாட்களில் விற்பனை அதிகரிக்கும்.
இந்தச் சூழலில், தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி, வழக்கத்தைவிட 30 சதவீதத்துக்கு மேல் விற்பனை நடக்கும் டாஸ்மாக்கடைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நாளை (ஏப்.6)வாக்குப்பதிவு நடக்க உள்ளதால், 4-ம் தேதி (நேற்று) முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால், டாஸ்மாக் கடைகளில் கடந்த 3-ம் தேதி கூட்டம்அதிகமாக இருந்தது. ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று3 நாட்களுக்குத் தேவையானமது பானங்களை மொத்தமாக வாங்கிச் சென்றனர். இதனால், நேற்று முன்தினம் ஒரே நாளில் தமிழகம் முழுவதும் ரூ.160 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்களில் கூறப் படுகிறது.