கோவை சாயியாபா காலனியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது நடனம் ஆடிய அக்‌ஷரா ஹாசன், நடிகை சுஹாசினி மணிரத்னம். 
தமிழகம்

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக அக்‌ஷரா ஹாசன், சுஹாசினி நடனமாடி பிரச்சாரம்

செய்திப்பிரிவு

கோவை தெற்கு தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக, அவரது மகள் அக்‌ஷரா ஹாசன், கமலின் அண்ணன் மகளும், நடிகையுமான சுஹாசினி ஆகியோர் நடனமாடி பிரச்சாரம் செய்தனர்.

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இவரது தனது தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கமல்ஹாசனுக்கு ஆதரவாக அவரது மகள் அக்‌ஷரா ஹாசன், கமலின் அண்ணன்மகளும், நடிகையுமான சுஹாசினி மணிரத்னம் ஆகியோரும் கோவையில் முகாமிட்டு பிரச்சாரம் செய்கின்றனர்.

நேற்று காலை முதலே கமல்ஹாசனுக்கு ஆதரவாக அக்‌ஷரா ஹாசனும்,சுஹாசினியும் கோவை தெற்கு தொகுதிக்குஉட்பட்ட பாரதி பார்க், சாயிபாபா காலனிஉள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் செய்தனர்.

துண்டுப் பிரசுரங்கள்

கமல்ஹாசனுக்கு ஆதரவாக டார்ச் லைட் சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று இருவரும் பொதுமக்களிடம் வேண்டுகோள் வைத்தனர். மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த துண்டறிக்கைகளையும் மக்களிடம் அவர்கள் விநியோகம் செய்தனர்.

பிரச்சாரத்தின் போது, அக்கட்சியினர் சார்பில் ஜமாப் தாளம் அடித்து உற்சாகப்படுத்தினர். அப்போது தாளத்துக்கு ஏற்றவாறு அக்‌ஷரா ஹாசன், சுஹாசினி ஆகியோர் நடனமாடி, பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர். பொதுமக்களும் உற்சாகமடைந்து, இவர்களுடன் இணைந்து நடனம் ஆடினர்.

SCROLL FOR NEXT